2011ம் ஆண்டு தெலுங்கில் வெளியான நுவில்லா படம் மூலம் சினிமாவில் கால் பதித்தவர் விஜய் தேவரகொண்டா. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவருக்கு அர்ஜுன் ரெட்டி பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தியில் ரீமேக் ஆனது. மேலும், அவருக்கு தமிழ் நாட்டிலும் ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்தது.
இதைத் தொடர்ந்து இவர் படங்கள் பல மொழிகளில் வெளியாகி வருகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வர்ல்டு ஃபேமஸ் லவ்வர் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் பூரி ஜகன்னாத் இயக்கத்தல் ஃபைட்டர் என்ற படத்தில் நடித்து வந்தார்.
இப்போது குவாரண்டைனால் அனைவரும் வீட்டில் முடங்கியிருப்பதால் விஜய் தேவரகொண்டா தன் படம் பற்றி ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். ‘ 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் 6வது படித்துக் கொண்டிருந்தபோது பத்ரியை (பூரி ஜகன்னாத்தின் முதல் படம்) தியேட்டரில் பார்த்தேன். நீண்ட நாட்கள் இதில் இடம்பெற்ற ஏ சிக்குவிதா பாடலை பாடிக் கொண்டிருந்தேன். உங்களையும் ஷூட் ஸ்பாட்டையும் மிஸ் செய்கிறேன்.’ என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
பூரி ஜெகன்னாத் சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. தெலுங்கு மட்டுமல்லாமல் பல மொழிகளில் இவர் பங்களிப்பு ஆற்றியிருக்கிறார். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தின் முதல் வெர்ஷன் இவர் தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து இயக்கிய படம். எம்.குமரன் படத்தின் முதல் வெர்ஷனும் இவருடையது தான். தமிழில் சிம்பு நடித்த ’தம்’, அருண் விஜய் நடித்த ’தவம்’ ஆகிய படங்களுக்கு திரைக்கதையும் எழுதி இருக்கிறார்.