திரைத்துறையில் நிறைய பாடல்கள் எழுதி கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய அளவில் பிரபலமான பாடலாசிரியர் விவேக்.
தொடக்கத்தில் பல படங்களுக்கு காதல், மெலோடி, திருமணம் என பல சூழல்களுக்கு பாடல் எழுதியிருந்த விவேக், விஜய்க்கு ‘ஆளப்போறான் தமிழன்’ என்கிற வரிகளை மெர்சல் படத்தில் எழுதியதன் மூலம் பிரபலமானார். இதேபோல் பிகில் படத்தில் விவேக் எழுதிய சிங்கப்பெண்ணே பாடல் அவருடைய பாடல் மணிமகுடத்தில் மற்றுமொரு வைரமானது.
அண்மையில் வெளியான வாரிசு திரைப்படத்தில் கூட ரஞ்சிதமே பாடல் எழுதியிருந்த விவேக், அப்படத்தில் வசனத்திலும் பணிபுரிந்தார். இப்படி பல படங்களில் ஹிட் பாடல்களை தந்த விவேக், விஜய் படங்களில் எழுதிய பாடகள் மட்டும் தனி ரகம். குறிப்பாக விஜய்யின் குணாதிசயங்களையும், விஜய் ரசிகர்களின் நாடியையும் பிடித்து எழுதும் விவேக், நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம், தீ தளபதி போன்ற பாடல்களில் மாஸ் பண்ணியிருப்பார்.
அப்படி விஜய் படங்களில் விஜய் குறித்து எழுதும் தவிர்க்க முடியாத பாடலாசிரியரான விவேக்கிற்கு விஜய் அன்பு முத்தம் கொடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இப்படத்தை பகிர்ந்துள்ள பாடலாசிரியர் விவேக், இது தொடர்பான தமது பதிவில், “சில பந்தங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. உங்களுடன் இந்த நம்பமுடியாத பயணத்தில், நீங்கள் என்னை ஒரு பிக் பிரதர் போல நேசித்தீர்கள், கவனித்துக்கொண்டீர்கள். நான் எப்போதும் விரும்பும் சிறந்த ஆன்மாவான உங்களுக்கு எப்போதும் சிறந்த விஷயங்கள் நடக்க வேண்டும். எனது கலைப் பயணத்தில், இந்த அழகான தருணத்தை எதுவும் முறியடிக்கவில்லை. என் உயிராக நேசிக்கிறேன் மை தளபதி😘” என குறிப்பிட்டுள்ளார்.