அமெரிக்கா: பீஸ்ட் படத்தின் கதை குறித்த தகவலை அமெரிக்க திரையரங்கம் வெளியிட்டுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
பீஸ்ட் சண்டைக்காட்சி படப்பிடிப்புக்கு டில்டா ரிக்கை பயன்படுத்துவதாகவும், ரெட் நிறுவன கொமோடோ கேமராக்களுக்கு இந்த ரிக் சிறப்பாக இருப்பதாகவும்,பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு ரெட் நிறுவனத்தின் புதிய வரவான RED RAPTOR வகை கேமராவை இந்தியாவிலேயே முதல் முறையாக பயன்படுத்துவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார்.
இந்த ரெட் ராப்டர் வகை கேமராவின் சிறப்பம்சமாக Slow Motion வீடியோக்களை துல்லியமாக 8K Resolution கொண்டு எடுக்கலாம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. நேற்று வெளியான முன்னோட்டமும் வரவேற்பை பெற்றநிலையில் பீஸ்ட் படத்தின் கதையை அமெரிக்க திரையரங்கமான கேலக்ஸி தியேட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த திரையரங்கில் பீஸ்ட் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் படத்தின் கதையாக "பயங்கரவாத அமைப்பின் தலைவரை விடுவிக்கக் கோரி, நகரத்தின் பரபரப்பான கேளிக்கை மால் சர்வதேச பயங்கரவாத அமைப்பால் சிறைபிடிக்கப்படுகிறது. இந்திய அரசு, பயங்கரவாத குழு உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. தீவிரவாத அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கிய போது, கடத்தப்பட்ட இடத்திற்குள் தனது முன்னாள் சகாவான முன்னாள் ரா ஏஜென்ட் (விஜய்) இருப்பதைக் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரி (செல்வராகவன்) கண்டுபிடித்து, பயங்கரவாதிகளிடமிருந்து பணயக்கைதிகளை மீட்க அவரிடம் உதவி கேட்கிறார்.
முன்னாள் ரா ஏஜென்ட் (விஜய்) பயங்கரவாதிகளுக்கு எதிராக கடத்தப்பட்ட இடத்திற்குள் தனது பணியைத் தொடங்குகிறார். இச்சூழலில் பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமைப்பின் தலைவர் அரசாங்கத்தால் விடுவிக்கப்படுகிறார். ரா ஏஜென்ட் மிகவும் புத்திசாலித்தனமாக திட்டமிட்டு, எவ்வாறு அவர் பயங்கரவாதிகளை கொல்கிறார்". என பீஸ்ட் படத்தின் கதை சுருக்கத்தை அமெரிக்க தியேட்டர் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.