பல பட புராஜக்டுகளுடன் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகர்களுள் ஒருவர் விஜய் ஆண்டனி.
இசையமைப்பாளராக தமது பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனிக்கு நினைத்தாலே இனிக்கும், காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், வேலாயுதம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட திரைப்படங்கள் பெருமளவில் கை கொடுத்தன.
பின்னர் நடிகராக நான், சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, அண்ணாதுரை, திமிரு பிடிச்சவன் படங்களில் நடித்த விஜய் ஆண்டனி தற்போது கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்ட அறிவிப்பு வந்ததிலிருந்து, ரிலீஸ்க்காக காத்திருந்த பல திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாவதற்கு தயாராகி வருகின்றன.
இந்த வரிசையில் விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்' படமும் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்துக்கு, என்.எஸ்.உதய குமார் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் ஆண்டனியே இந்த படத்துக்கு எடிட்டிங் செய்துள்ளார். மேலும் இது எடிட்டராக அவருக்கு மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 'மெட்ரோ' திரைப்படம் மூலம் அறியப்பட்ட ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை ஆத்மிகா நாயகியாக நடிக்கிறார். இந்த படம் ஒரு பொலிடிகல் த்ரில்லர் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், இசையமைப்பாளராக இருந்து நடிகரான விஜய் ஆண்டனி, இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ள பிச்சைக்காரன் 2-ஆம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று (செப்டம்பர் 1) பூஜையுடன் தொடங்கியது.
‘நான்’ திரைப்படம் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமான விஜய் ஆண்டனி, கடந்த 2016 -ல் வெளியான 'பிச்சைக்காரன்' படத்தில் நடித்தார். அந்த படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து, தற்போது 'பிச்சைக்காரன் 2' படத்தை இயக்கி நடித்து இசையமைத்து தயாரிக்கிறார்.
இவை தவிர தமது தயாரிப்பிலான 'தமிழரசன்', 'அக்னி சிறகுகள்' மற்றும் 'காக்கி' ஆகிய திரைப்படங்களும் விஜய் ஆண்டனியின் கைவசம் உள்ளன.