ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து எடிட்டிங் செய்திருக்கும் திரைப்படம் கோடியில் ஒருவன்.
நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கிறது. இன்ஃபினிட்டி பிலிம்ஸ் வெளியிட்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி வெளியான இந்த திரைப் படத்தின் வெற்றி விழாவில் பேசிய விஜய் ஆண்டனி பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார்.
தமது பேச்சில், “சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்பதுபோல் பல பெரிய கனவுகள் இருக்கும். அவை எல்லாவற்றுக்கும் மதிப்பெண்கள் வேண்டும். எனக்கு படிப்பு வரவில்லை. அதனால் அம்மாவை ஏமாற்றுவதற்காக சினிமாவுக்கு போகிறேன்.. சினிமாவுக்கு போகிறேன்.. என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
ஆனால் எனக்கு இசை அறிவு கிடையாது. proper-ஆக நடிக்க தெரியாது. பேசக்கூட தெரியாது. ஆனால் மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக் கொண்டிருந்தேன். மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது அதற்கு ஒரு எனர்ஜி பிறக்கும் என்று சொல்வார்களே.. அது போல், நான் மட்டுமே அதை நம்பிக் கொண்டிருந்தேன். இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன்” என்று பேசத் தொடங்கிய விஜய் ஆண்டனி, தன்னுடைய திரைப்படங்களும், இயக்குனர்களும், அவர்களுடைய கதையும், உழைப்பும்தான் தன்னுடைய வெற்றிக்கும் காரணம் என்று குறிப்பிட்டார். அதேபோல் பலரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து, அவர்களை மக்களிடையே கொண்டுசென்று சேர்த்த மிகப்பெரிய ஆட்கள் பத்திரிக்கையாளர்கள். அவர்கள் முன்னால் நின்று பேசுவது தன் அம்மா செய்த புண்ணியம் என்று விஜய் ஆண்டனி குறிப்பிட்டார்.
மேலும் பேசியவர், “இயக்குனர் சசி சார்.. பிச்சைக்காரன் (பிச்சைக்காரன் முதல் பாகம். இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி எழுதி இயக்கி வருகிறார்) கதை சொல்லும் போது ஒரு பகுதியில் அவரே அழுதார். என்னிடம் சொல்லும்போதே அப்படி அழுதார் என்றால், அவர் அந்த கதையை எழுதும்போது எப்படி எமோஷனல் ஆகியிருப்பார். அதேபோல்தான் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனும் எமோஷனலாக அந்த கதையை எழுதியிருக்கிறார்” என்று சொன்ன விஜய் ஆண்டனி, இயக்குநர் ஆனந்த கிருஷணனை பார்த்து “உங்கள் குழந்தைக்கு டெலிவரி ஆகியுள்ளது. இதைப் பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் தான் இந்த விழா நாயகன். அட்லீ போல், லோகேஷ் கனகராஜ் போல் நீங்களும் விஜய், அஜீத் உள்ளிட்ட பெரிய நடிகர்களை இயக்குவீர்கள். அதற்கான தகுதி உங்களிடம் இருக்கிறது!” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, “என்னதான் ஒரு கற்பனை இருந்தாலும், அந்த கற்பனையை நம்பி, மற்றவர்களுக்குதான் புகழ் வரும் என்று தெரிந்தும், அவர்களுக்காக பண முதலீடு செய்யும் தயாரிப்பாளர் முக்கியமானவர். அவர் அடுத்த விழா நாயகன் அவருக்கு நன்றி.” என்று குறிப்பிட்டார் விஜய் ஆண்டனி. தொடர்ந்து பேசியவர், “தயாரிப்பாளரை அடுத்து விநியோகஸ்தர்கள் முக்கியமானவர்கள். இந்த திரைப்படத்தை கொண்டுசென்று சேர்த்த அவர்களுக்கு போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்கிற கவலை, அவர்களை விட எனக்கு பத்து மடங்கு இருந்தது. நான் வெளியே சொல்லிக் கொள்ளவில்லை. நான் இந்த படம் பண்ணுகிறேன். அடுத்த படம் பண்ணுகிறேன். ஆனால் அவர்கள் என்ன பண்ணுவார்கள் என்கிற சிந்தனை இருந்து கொண்டே இருந்தது.
அவர்களுக்கு இந்த படம் வெற்றியடைந்து மகிழ்ச்சியை கொடுத்திருப்பது தான் முக்கியமானது. எனக்கு அதில் மகிழ்ச்சி. நன்றி கமல் போஹ்ரா சார், தனஞ்செயன் சார், பங்கஜ் போஹ்ரா சார்” என்று அவர்களுக்கு நன்றி சொல்லி விடைபெற்றார் விஜய் ஆண்டனி.
அதன் பின்னர் குழு புகைப்படம் எடுக்கும் பொழுது முதலில் நாற்காலியில் அமர்ந்த விஜய் ஆண்டனி, “அனைவரும் போட்டோவில் கவராக மாட்டீர்கள்.. சிலர் கீழே அமருங்கள்” என்று நிகழ்ச்சி நெறியாளர் பொதுவாக கேட்டுக் கொண்டதும், முதல் ஆளாக சட்டென ஸ்டேஜில் இருந்த நாற்காலியில் இருந்து எழுந்து ஸ்டேஜிலேயே கீழே உட்கார்ந்துவிட்டார். அவருடன் சக கலைஞர்கள் உட்கார்ந்து கொண்டனர். இந்த முழு பேச்சையும், பத்திரிகையாளர் சந்திப்பையும் இணைப்பில் உள்ள வீடியோவில் காணலாம்.