இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டது குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்து நிலையில் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த ஜோடிக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
திருமணத்திற்கு பிறகு பல இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்து வந்த விக்கி - நயன் ஜோடி, சமீபத்தில் தங்கள் இரட்டை குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்திருந்தது.
வாடகைத்தாய் மூலம் அவர்கள் இரட்டைக் குழந்தைகள் பெற்றுக் கொண்ட நிலையில், பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அதே வேளையில், 4 மாதங்களுக்குள் அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது பெரிய விவகாரமாகவும் மாறி இருந்தது.
அப்படி இருக்கையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டது குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி தற்போது இதுகுறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் விதிகளை மீறி அவர்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்ளவில்லை என்பது உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல ICMR வழிமுறைப்படி தான் அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்கள் என்பதும் உறுதியாகியுள்ளது.