இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர், ஏழு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
மகாபலிபுரத்தில் வைத்து நடந்த இவர்களின் திருமணத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் ஷாருக்கான், இயக்குனர் மணிரத்னம், இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் சூர்யா, அட்லி, அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தனர். விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண புகைப்படங்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.
திருமணத்திற்கு பின்னர், இருவரும் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அதிகம் வைரலாகி இருந்தன. இதனைத் தொடர்ந்து, இருவரும் இந்தியா திரும்பிய நிலையில், ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கும் வேலையில், நயன்தாரா கவனம் செலுத்தி வந்தார். மறுபக்கம், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர பணிகளில் விக்னேஷ் சிவன் ஈடுபட்டிருந்தார்.
இதனையடுத்து, தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும், ஐரோப்பாவில் உள்ள ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சென்றுள்ளனர். இது தொடர்பாக, விமானத்தில் இருந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், பார்சிலோனாவில் மனைவி நயன்தாராவுடன் சுற்றித் திரியும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். அது மட்டுமில்லாமல், நயன்தாராவை விக்னேஷ் சிவன் புகைப்படம் எடுத்தும் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். "டாலடிக்கும் ரத்தினமே, மினுமினுக்கும் முத்தாரமே" என்றும் குறிப்பிட்டு, #Wikkiclicks என்ற ஹேஷ்டேக்குகளையும் அவர் இணைத்துள்ளார்.
மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு தான் எடுத்த சிறந்த புகைப்படங்கள் என்றும் நயன்தாராவின் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.
பார்சிலோனாவில் நயனதாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.