இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் தனது குறும்படங்களான ‘யுவர்ஸ் ஷேம்ஃபுலி’ மற்றும் ‘யுவர்ஸ் ஷேம்ஃபுலி 2’ ஆகியவற்றின் தொடர் வெற்றிகளுக்குப் பிறகு புகழ் பெற்றார். சமீபத்தில் முதல் கனவே 2 என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். அதுவும் இணையவாசிகளிடையே சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கும், தனது அடுத்த திரைப்படமான ‘திட்டம் இரண்டு’ படத்துக்காக அவர் தயாராகி வருகிறார்.
இப்படத்தைப் பற்றி விக்னேஷ் கார்த்திக் கூறுகையில், 'இந்தப் படம் க்ரைம் த்ரில்லர். ஐஸ்வர்யா ராஜேஷ் இதற்கு முன்பு செய்யாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் புதுமையாகவும், வித்தியாசமான படமாகவும் இருக்கும். நிச்சயமாக பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும்.”
லாக்டவுன் காலகட்டத்தில் விக்னேஷ் கார்த்திக் நான்கு குறும்படங்களை இயக்கியுள்ளார். வீட்டுக்குள்ளேயே இருக்கும் போது இதையெல்லாம் எப்படித் திட்டமிட்டார் என்று கேட்டபோது, “முதல் 10 நாட்களுக்கு நான் மிகவும் சோம்பேறியாகத்தான் இருந்தேன். எந்த வேலையும் செய்யவில்லை. என் வீட்டில் சும்மாதான் இருந்தேன். அப்போது திரைப்படங்களையும் வெப் தொடர்களையும் அதிகமாகப் பார்த்தேன். திடீரென்று, ஒரு சிறிய சிந்தனை என் மனதைத் தாக்கியது, இறுதியில், அது யுவர்ஸ் ஷேம்ஃபுலி 2.5 க்கு வழி வகுத்தது, அதைப் போலவே, மற்ற மூன்று குறும்படங்களையும் உருவாக்கினோம். ”
விக்னேஷ் கார்த்திக் ஒரு வித்யாசமான இயக்குனர் மட்டுமல்ல, அற்புதமான நடிகரும் கூட என்பதை அவரது ரசிகர்கள் அறிவார்கள். அவர் இயக்கும் குறும்படங்களில் அவரது நடிப்பு பார்வையாளர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. இது குறித்து அவர் கூறியது, “நான் நடிப்பில் ஒரு தொழிலாகப் பார்க்கவில்லை. நான் நடிக்க விரும்புகிறேன், ஆனால் கேமராவின் பின்னால் இயக்குவதற்கும், வேலை செய்வதற்கும் அதிகம் விரும்புகிறேன். சொல்ல முடியாது... சில வருடங்கள் கழித்து, நான் நடிக்கவும் கூடும், ஆனால் நான் எப்போதும் ஒரு இயக்குநராகவே அறியப்பட விரும்புகிறேன் ” என்று விக்னேஷை கூறினார்.
விக்னேஷ் தனது அடுத்த திரைப்படத்துக்கு ஹிப்ஹாப் தமிழாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராகி வருகிறார். அது ஒரு அறிவியல் புனைகதை. இதனைத் தொடர்ந்து ஒரு OTT தளத்திற்காக வெப் தொடர் மற்றும் குறும்படங்களிலும் பணியாற்றி வருகிறார். இந்த இளம் இயக்குனரின் ரசிகர்களுக்கு இது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.