ரசிகர்களால் அன்பாக மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி இன்று தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், விடுதலை படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது 44 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், சக நடிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்த்தி தெரிவித்துள்ளனர். எந்தவொரு குடும்ப பின்னணியும் இல்லாமல் கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்து அங்கு கிடைத்த அறிமுகத்தின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜுவின் முதல் படமான பீட்சாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி.
முன்னதாக இவர் புதுப்பேட்டை படத்தில் தனுசுக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார். பீட்சா, நடுவுல பக்கத்த காணோம் படங்கள் கொடுத்த வெற்றி மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர் என விஜய் சேதுபதி தொடாத வேடங்களே இல்லை. விஜய் சேதுபதிக்கு சில படங்கள் சறுக்கினாலும், இன்றளவிலும் மாஸ் ஹீரோவாக இருந்து கொண்டிருக்கிறார்.
எந்த சமூக பிரச்சினையாக இருந்தாலும் தனியா கெத்தா வந்து தனது கருத்தை வெளிப்படையா தெரிவிக்கும் ஒரு மாஸ் அண்டு கிளாஸ் ஹீரோவாக உள்ளார் விஜய்சேதுபதி. விக்ரம் வேதா படத்தில் அவர் காட்டிய மிரட்டலான நடிப்பு, மாஸ்டரில் இடம்பெற்ற விஜய்க்கே போட்டி கொடுக்கும் வில்லத்தனம் ஆகியவை விஜய் சேதுபதிக்கு மாற்று இல்லை என்பதை உறுதி செய்தன. சூப்பர் டீலக்ஸ் படத்தில் யாரும் ஏற்றிடாத கதாப்பாத்திரம் அவருக்கு தேசிய விருதை அளித்தது.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஆசை உண்டு. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராக நடித்துள்ளார். இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நக்சலைட்டாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சி இயக்குனராக பணியாற்றுகிறார். இந்தப்படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இவர் ஏற்கனவே கோ, கவண் போன்ற படங்களை தயாரித்தவர்.
பல்வேறு தரப்பினரும் விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த நிலையில், விடுதலை படக்குழு பட போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளது. வாத்தியார் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகள் என அந்த போஸ்டரில் இடம்பிடித்துள்ளன. அதேபோன்று நகைச்சுவை நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஹேப்பி பர்த்டே விஜய்சேதுபதி மாமா என பதிவிட்டுள்ளார்.