நாவல்களை அடிப்படையாக வைத்து ஜனரஞ்சகமான வெற்றிப் படங்களை கொடுத்து வரும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
தற்போது இவருடைய கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வெளியிட, உதய் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் மணிமாறன் இயக்கியுள்ள சங்க தலைவன் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இரா.பாரதிநாதன் எழுதிய ‘தறியுடன்’ என்னும் தறி நெசவாளர்கள் பற்றிய நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் ‘சங்கத்தலைவன்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கருணாஸ், ‘விஜே’ ரம்யா, ‘அறம்’ சுனுலட்சுமி, மாரிமுத்து, எம்.ஜி.ஆரின் பேரனான ராமச்சந்திரன் என்கிற ஜூனியர் எம்.ஜி.ஆர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘ஸ்டில்ஸ்’ ராபர்ட்டின் மகன் ராபர்ட் சற்குணம் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இயக்குநர் மணிமாறன் ஹரீஷ் கல்யாண் நடித்த பொறியாளன் திரைப்படத்துக்கு கதை எழுதியிருந்தார். தவிர, உதயம் NH4, புகழ் ஆகிய திரைப்படங்களை இயக்கிய மணிமாறன் முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தின் 2வது யூனிட் டைரக்டராகவும் பணியாற்றினார். புலம்பெயர்ந்து தறி நெசவு தொழில் செய்யும் தமிழர்கள் தங்களுக்கான உரிமைகளுக்காகவும், வாழ்வாதாரத்துக்காகவும், சுயமரியாதைக்காகவும் போராடுவதுதான் ‘தறியுடன்’ நாவலின் கதை.
எனினும் இத்திரைப்படத்தில் கருணாஸ் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோரின் கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்படத்துக்கான திரைக்கதை உள்ளிட்டவை மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஏற்கனவே வெளியாகியிருந்தது. அப்போது அந்த நிகழ்வில் பேசிய சமுத்திரக்கனி, “வெற்றிமாறன் குதிக்க சொன்னாக்கூட குதித்து விடுவேன்!” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திரைப்படத்தில் விஷுவலாக எந்த காட்சியும் வெட்டப்படவில்லை. இரண்டு இடங்களில் வசனம் மியூட் செய்யப்பட்டுள்ளதாகவும், இத்திரைப்படம் கருணாஸின் திரைவாழ்வில் முக்கியமான திரைப்படமாக அமையும் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படம் சென்சாரில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளதாக நம்மிடையே பிரத்தியேகமாக தெரிவித்த இயக்குநர் இந்த திரைப்படம், இந்த பிப்ரவரி மாதத்தலேயே மிக விரைவில் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.