தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி திரை மொழியையும் வித்தியாசமான கதை தேர்வையும் கொண்டவர் இயக்குநர் வெற்றிமாறன்.
தனுஷை வைத்து தன்னுடைய முதல் படமான பொல்லாதவன் படத்தில் தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கிய வெற்றிமாறன் இயக்குநர் பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக இருந்தவர். பின்னர் தனுஷை வைத்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். இவை அனைத்துமே அடுத்தடுத்து முந்தைய படத்தை பீட் செய்யும் அளவுக்கு ஹிட் கொடுத்தன.
இதில் ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட படங்கள் விருதுகளை குவித்தன. இதனிடையே காவல்துறையின் அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கி இருந்த விசாரணை திரைப்படம் வெனிஸ் திரை விழாவில் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனுஷின் வுண்டர்பார் வெளியீட்டின் கீழ் திரையரங்கிலும் வெளியிடப்பட்டது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் அசுரன் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் சிறந்த மாநில மொழிப்படத்துக்கான தேசிய விருது பெற்றதுடன், சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ்க்கும் பெற்றுத் தந்தது.
இந்நிலையில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெற்றிமாறன் ஒரு திரைப்படம் இயக்கி வருவதாக கூறப்பட்டது. இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். இளையராஜா தொடங்கிய தம்முடைய புது ஸ்டூடியோவில் அவர் இசை அமைத்த முதல் படம் வெற்றிமாறனின் இந்த திரைப்படம்தான். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
‘விடுதலை’ என்கிற தலைப்புடன் சூரி காவலராக நின்று கொண்டிருக்கும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜெயமோகனின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வாத்தியாராக விஜய் சேதுபதியும் கதையின் நாயகனாக சூரியும் நடிப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தற்போது படப்பிடிப்பில் இருக்கும் இந்த திரைப்படம் எல்ரெட் குமாரின் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. படம் குறித்த பல்வேறு தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.