'விடுதலை' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகிறது.
சில நாட்களுக்கு முன், விடுதலை படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விடுதலை படத்தின் நடிகர்கள் குழுவில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்த நட்சத்திரக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
இந்த விடுதலை படத்திலும் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.
தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விடுதலை படம் வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.