ஜோதிகா & சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியான இந்த படத்தில் சூர்யாவுடன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ளார். 1995-ல் தமிழகத்தில் ராஜாக்கண்ணு உள்ளிட்ட பழங்குடி இருளர் இன மக்களை பொய் வழக்கில் குற்றம் சாட்டி, லாக்கப் மரணத்துக்குள்ளாக்கிய காவல்துறையினரின் மனித உரிமை அத்துமீறலை படம் சித்தரிக்கிறது.
படத்தில் ராஜாகண்ணுவாக மணிகண்டனும், அவரது மனைவி செங்கேனியாக லிஜோ மோல் ஜோஸூம் நடித்துள்ளனர். முன்னதாக இப்படத்தில் காவலர் குருமூர்த்தியாக வரும் தமிழரசன் போன் பேசும் காட்சியின் பின்னணியில் இருந்த குறியீடு மற்றும் அவருடைய பெயர், உண்மைக்கதைக்கும் - படக்கதைக்குமான வேறுபாட்டு முரண்கள் உள்ளிட்ட பலவற்றையும் பலரும் விமர்சித்து வந்தனர். அதற்கு இணையாக பாராட்டுக்களையும் இப்படம் பெற்று வருகிறது.
இதனிடையே இந்த விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்திருந்த சூர்யா படைப்புச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்படவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ்க்கு எழுதியிருந்த பதில் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இயக்குநர்கள், திரைப் பிரபலங்கள், தென்னிந்திய வர்த்தக சபை மற்றும் இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் என பலரும் சூர்யா மற்றும் ஜெய்பீம் படத்துக்கு ஆதரவான தங்களது கருத்துக்களை முன்வைத்து அன்புமணி ராமதாஸ்க்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இந்நிலையில் ஜெய்பீம் மற்றும் சூர்யா குறித்து இயக்குநர் வெற்றிமாறன் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், “ஒரு சரியான செயலைச் செய்வதற்காக யாரும் யாரையும் சிறுமைப்படுத்திவிட முடியாது. #ஜெய்பீம். நட்சத்திர அந்தஸ்து என்கிற ஒன்றை, மறுவரையறை செய்யும் ஒரு நட்சத்திரம் நடிகர் சூர்யா. பாதிக்கப் பட்டவர்களின் அவல நிலையை உலகறியச் செய்யும் வகையில் இப்படத்தை உருவாக்குவதற்கு இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் அர்ப்பணிப்பும், சமூக நீதிக்காக சூர்யாவின் தொடர்ச்சியான திரைவாழ்க்கை & பொதுவாழ்க்கை முயற்சிகளும் உண்மையிலேயே உத்வேகம் அளிப்பதாக உள்ளன. #ஜெய்பீம்.
மேற்கூறிய சமூக அவல நிலை, மாறுவதை விரும்பாதவர்கள் மத்தியில், இந்தப் படங்கள் கோபத்தை ஏற்படுத்துவது இயற்கையே! #WeStand With Suriya. ஒரு சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், அநீதிகளையும் கேள்விக்குள்ளாக்கும் திரைப்படங்களும், சமூக நீதிக்கான ஆயுதங்கள் ஆகும். #ஜெய்பீம் படக்குழுவினர்கள் அத்தனை பேருக்கும் நாங்கள் துணை நிற்கிறோம்”, என்று இயக்குநர் வெற்றிமாறன் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ் நடிப்பில் 2 தேசிய விருதுகளை வென்ற, ‘அசுரன்’ திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறன், தற்போது விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில்,‘விடுதலை’ எனும் திரைப்படத்தை இயக்கிவருகிறார்.
இதனைத்தொடர்ந்து சூர்யா நடிப்பிலான ‘வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்குகிறார். இப்படத்தின் முதல் பார்வை ஏற்கனவே வெளியாகியிருந்தது. ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.