8 ஆவது Behindwoods Gold Medals விருது நிகழ்ச்சி, மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.
இரண்டு நாட்களிலும் ஏராளமான பிரபலங்கள், Behindwoods விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வெற்றிமாறன், செல்வராகவன், வெங்கட் பிரபு, எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள், இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்திருந்தனர்.
அற்புதம் அம்மாளின் 'தியாகம்'
அதே போல, ராஜீவ் காந்தி வழக்கு தொடர்பாக சுமார் 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து சமீபத்தில் விடுதலை ஆன பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், Behindwoods கோல்டு மெடல்ஸ் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பேரறிவாளன் விடுதலை ஆன சமயத்தில் பலரும் அவரது தாய் அற்புதம் அம்மாளின் தியாகம் குறித்தும் உருக்கமாக பேசி இருந்தனர். இந்நிலையில் தான், Behindwoods கோல்டு மெடல்ஸ் மேடையில் அற்புதம் அம்மாளுக்கு, "Golden icon of inspiration" என்ற விருது வழங்கப்பட்டது.
விருது வென்ற பின்னர் பேசி இருந்த அற்புதம் அம்மாள், அனைவரின் ஒத்துழைப்பு இருந்ததால் தான் என்னால் வெற்றி பெற முடிந்தது என்றும், அனைவருடைய கூட்டு அன்பு தான் மகன் விடுதலையாக காரணம் என்றும் மனம் உருகி கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார். அதே போல, மகனின் ஸ்தானத்திலிருந்து, இயக்குனர் வெற்றிமாறன் அற்புதம் அம்மாளுக்கு புடவை ஒன்றையும் பரிசாக வழங்கினார்.
மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன்
இதன் பின்னர் பேசிய வெற்றிமாறன், "அற்புதம்மாள் சோர்வாக இருந்து நான் பார்த்ததே கிடையாது. பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனையை அறிவித்து, தேதியும் குறிப்பிட்ட சமயத்தில், நான் அற்புதம்மாளை சந்தித்தேன். அப்போது கூட எந்த ஒரு சந்தேகமும், எந்த ஒரு பயமும் அவரிடத்தில் இல்லை. ஒரு வேளை இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், அவ்வளவு தன்னம்பிக்கையாக தனது மகனை நிச்சயம் காப்பாற்றுவேன் என்றபடி இருந்தார். அவர் நிச்சயம் ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்" என வெற்றிமாறன் பேசினார்.
அற்புதம் அம்மாள் குறித்த பயோபிக்
தொடர்ந்து, அற்புதம் அம்மாள் பயோபிக் இயக்குவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன், "இது தொடர்பாக, கடந்த 2, 3 ஆண்டுகளாக நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்கான நேரம் இப்போது வந்து விட்டது என்று நான் நினைக்கிறேன். அவர்களின் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே சொல்ல வேண்டும் என நாங்கள் ஆசைப்படுகிறோம். திரைப்படமா அல்லது வெப் சீரிஸா என்பதை இன்னும் நாங்கள் தீர்மானிக்கவில்லை. ஆனால் நிச்சயமாக இதை உருவாக்குவோம்" என வெற்றிமாறன் பேசி இருந்தார்.