தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குநர், நடிகருமான கே.பாக்யராஜ் தலைமையிலான அணி போட்டியிடுகிறது.
வரும் 2019-2022ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி சென்னை எம்.ஜி.ஆா் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையேற்று நடத்தவிருக்கிறார்.
இந்நிலையில், பாண்டவர் அணி சார்பாக நாசர் தலைமையிலான தற்போதைய நிர்வாகத்தினர் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தனர். தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், துணைத் தலைவர் பதவிக்கு பூச்சி முருகன், செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு கோவை சரளா, மனோபாலா, குஷ்பு உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
பாண்டவர் அணிக்கு எதிராக இம்முறை நடிகர் சங்க தேர்தலில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் தலைமையில் ஓர் அணி களமிறங்குகிறது. இதில் தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து கே.பாக்யராஜும், பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், மற்றும் உதயா, குட்டி பத்மினி ஆகியோர் துணைத்தலைவர் பதவிகளுக்குப் போட்டியிட உள்ளனர்.