2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் வெண்ணிலா கபடிகுழு.
விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் அவருடன் அப்புகுட்டி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஹரி வைரவன். இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் ஹரி வைரவனின் தற்போதைய நிலை குறித்து பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் பிரத்தியேக நேர்காணல் மூலம் தெரியவந்துள்ளது. இதில் அவருடைய மனைவி பேசும்போது, “வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் நடித்த என் கணவர் ஹரி. எங்களுக்கு வீட்டில் தான் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். வாழ்க்கை நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. என் கணவர் ஹரியும் என்னை நன்றாகவே பார்த்துக் கொண்டார். ஆனால், திடீரென்று ஒருநாள் அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். அவர் இறந்துவிட்டார் என்றே பலரும் சொன்னார்கள்.
ஆனாலும் நம்பிக்கையுடன் அவரை அழைத்துகொண்டு மருத்துவமனைக்குக் சென்றேன். அப்போது மருத்துவர்கள் அவர் கோமாவில் இருப்பதாக சொன்னார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் நான் தினமும் அவருக்கு பழைய விஷயங்களை நினைவூட்டி பேசிக்கொண்டே இருப்பேன். 15 நாட்கள் கோமாவில் இருந்த அவர் மெல்ல மீண்டார். ஆனால் அவருக்கு ஏற்கனவே சர்க்கரை வியாதி இருந்ததால் கை, கால் வீங்கியது. அப்போதும் பலரும் அவர் பிழைப்பதே கடினம் என்றும், இப்படி நடந்தால் 6 மாதம் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்று சொல்லிவிட்டார்கள்.
கோமாவில் இருந்து வந்த அவர் வாக்கிங் போக வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அவர் உடல் வெயிட் போட்டு இருந்ததார். முதலில் சமாளிக்க கஷ்டப்பட்டோம், பின்னர் மருத்துவர்கள் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக அவரை நடக்க வைக்க முயற்சித்தோம். இப்போது அவர் கொஞ்சம் நடக்கிறார், பேசவும் செய்கிறார். இத்தனைக்கும் பிளாக் பாண்டி அண்ணா, கார்த்திக் அண்ணா, சரவணா அண்ணா உள்ளிட்ட என் கணவருடன் பணிபுரிந்த நண்பர்களும் உதவினர்.
எனினும் இப்போது அவருக்கு 10 நாளைக்கு ஒருமுறை 8000 ரூபாய் மருத்துவ செலவே ஆகிறது. சொந்த வீட்டை விற்று தான் இவருடைய கடனையும் மருத்துவ செலவையும் பார்த்தேன், நான் இப்போது பெட்டிக்கடை வைத்திருக்கிறேன். அதில் வரும் வருமானத்தை வைத்தே குடும்பத்தை நடத்துகிறேன், மருத்துவச் செலவையும் பார்க்கிறேன், இன்னும் 6 மாதம் மருத்துவம் செய்தால் என் கணவர் முழுமையாக குணம் அடைவார். அவர் இருந்தால் மட்டும் போதும். அவரை பார்த்துக்கொள்ள எனக்கு தெம்பு இருக்கிறது” என்று கண் கலங்கி பேசியிருக்கிறார்.
பேட்டியில் நடிகர் ஹரியின் மனைவி பேசியிருக்கும் வீடியோ இணைப்பில்..