இயக்குனர் வெங்கட் பிரபுவின் டிவிட்டர் கேள்விக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.

Also Read | "இப்பவும் அப்படியே இருக்கார்".. விஜய்யை சந்தித்த பிரபல தமிழ் இயக்குனர் & நடிகர்! வைரல் ட்வீட்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகி இருந்தது. டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தை ரசிகர்களை கவரும் வகையில் மிகவும் நேர்த்தியாக இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு.
மாநாடு திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, 117 கொடி ரூபாய் வசூல் செய்து பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, மிகவும் குறுகிய காலத்தில், நடிகர் அசோக் செல்வனை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய மன்மத லீலை திரைப்படமும், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியானது.
தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் வெங்கட் பிரபு புதிய படத்தில் இணைந்துள்ளார். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11 ஆவது திரைப்படம் இதுவாகும். அதே போல, தெலுங்கில் அவர் இயக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் வில்லனாக பிரபல தமிழ் நடிகர் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகை பிரியா மணி, நடிகர் சம்பத், தெலுங்கு காமெடி நடிகர் வெண்ணிலா கிஷோர், வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. தெலுங்கில் இப்பூஜையை போயபத்தி ஶ்ரீனு கிளாப் அடித்து துவக்கி வைத்தார். கேமராவை ராணா ஆன் செய்தார். தமிழில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கிளாப் அடித்து துவக்கி வைத்தார். நடிகர் சிவகார்த்திகேயன் கேமராவை ஆன் செய்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு, "ப்ரோ நம்ம எப்போ ஷூட்டிங் போலாம்?" என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், "ஹலோ வெங்கட் பிரபு சார்.. ஷூட்டிங் எப்போ வேணாலும் போலாம் சார். அந்த கதை எப்போ சார் கேட்கலாம்?. எனக்கு இன்னொரு கேள்வி இருக்கு சார். பிரேம்ஜி ப்ரோ கூட நான் அந்த படத்துல என்ன ரோல்ல சார் நடிக்கிறேன்?" என சிவகார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.
மேலும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி, "ஷூட்டிங் ப்ளான் பண்றீங்களா?" என ட்வீட் செய்ய "உங்களுக்கு தெரியாம எப்படி?" என வெங்கட் பிரபு பதில் ட்வீட் செய்துள்ளார்.
இந்த ட்வீட்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
Also Read | முழு டபுள் ஆக்சன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்? அவரே சொன்ன மாஸான பதில்!