வெங்கட் பிரபு இயக்கி வரும் 'மாநாடு' படத்தில் சிம்பு, அப்துல் காலிக் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்காக அவரது வித்தியாசமான லுக் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இந்த படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த பாடல்களை கேட்டதாகவும் அந்த பாடல்கள் சிறப்பாக வந்துள்ளதாகவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் இதற்காக யுவன் ஷங்கர் ராஜாவை பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் மீது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ரூ.30 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளதாகவும், அதற்காக ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.7.8 லட்சம் பீரிமியம் செலுத்தி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் நிகழ்ந்த இந்தியன் 2 விபத்தின் காரணமாக திரைப்படங்களுக்கு காப்பீடு செய்து கொள்வது நல்லது என்று கூறப்பட்டுவந்தது.
'மாநாடு' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.