இயக்குனர் வெங்கட்பிரபு இயக்க உள்ள அடுத்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
மாநாடு, மன்மத லீலை…
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி, சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகி இருந்தது.டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தை அனைத்து தரப்பிலான மக்களுக்கு புரியும் வகையில், நேர்த்தியாக இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு. மாநாடு திரைப்படமும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, 117 கொடி ரூபாய் வசூல் செய்து பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, மிகவும் குறுகிய காலத்தில், நடிகர் அசோக் செல்வனை வைத்து அவர் இயக்கிய மன்மத லீலை திரைப்படமும், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகியது. இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்த மன்மத லீலை திரையரங்குகளிலும் ஓடிடியிலும் நல்ல கவனம் பெற்றது.
VP 11
இந்த இரு படங்களுக்குப் பிறகு தற்போது வெங்கட்பிரபு அடுத்ததாக தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் அடுத்து வெங்கட் பிரபு இணையும் இருமொழி படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் அறிவிப்பு குறித்த புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11 ஆவது திரைப்படம் இதுவாகும். அதே போல, தெலுங்கில் அவர் இயக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கும் இந்த படத்தினை பவன் குமார் வழங்குகிறார். நாகசைதன்யா தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஒளிப்பதிவாளர் S.R. கதிர் செயல்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்முறையாக இளையாராஜாவோடு…
ஜூன் 23 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தின் பாடல் பதிவு சென்னையில் நேற்று துவங்கி உள்ளதாகவும், இப்படத்தில் இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இளையராஜாவின் ஸ்டுடியோவில் அவரோடு இயக்குனர் வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி இந்த தகவலை மேலும் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.