மாநாடு, மன்மத லீலை படங்களைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கவுள்ளது பற்றி அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி, சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகி இருந்தது.
டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தை அனைத்து தரப்பிலான மக்களுக்கு புரியும் வகையில், நேர்த்தியாக இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு.
இதனால், மாநாடு திரைப்படமும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, மிகவும் குறுகிய காலத்தில், நடிகர் அசோக் செல்வனை வைத்து அவர் இயக்கிய மன்மத லீலை திரைப்படமும், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகி, தற்போது வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
இந்நிலையில், வெங்கட் பிரபு அடுத்து இயக்கவுள்ள திரைப்படம் குறித்து தற்போது அறிவிப்பு வெளி வந்துள்ளது. தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் அடுத்து வெங்கட் பிரபு இணையும் இருமொழி படம் குறித்த புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது. நாகசைதன்யா நடிப்பில், பங்கார ராஜு என்ற படம் இந்த ஆண்டு வெளிவந்தது. அடுத்ததாக, “Thank you” என்ற அவரது அடுத்த படம் வெளியீட்டிற்கு காத்திருக்கும் வேளையில், இயக்குநர் வெங்கட் பிரபு உடன் இணையும் அவரது 22வது படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரமாண்டமாக உருவாக உள்ளது.
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11 ஆவது திரைப்படம் இதுவாகும். அதே போல, தெலுங்கில் அவர் இயக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கும் இந்த படத்தினை பவன் குமார் வழங்குகிறார். நாகசைதன்யா தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படம் பெரிய பட்ஜெட்டில் , சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரமாண்டமாக உருவாகவுள்ளது.
புதிதான வெங்கட் பிரபு மற்றும் நாகசைதன்யா ஆகியோர், முறையே தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் அறிமுகமாகவுள்ளதால், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், இந்த படக்குழு பற்றிய மற்ற விவரங்கள், விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என குறிப்படப்பட்டுள்ளது.