சென்னையில் பார்வையற்ற மாணவர்களுக்காக வெந்து தணிந்தது காடு படத்தின் காட்சி திரையிடல் இன்று நடந்தது.
வெந்து தணிந்தது காடு படம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தினை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 473 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக எழுத்தாளராக இணைந்துள்ளார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிந்துள்ளனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 'வெந்து தணிந்தது காடு’ படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் NFDC அரங்கில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு என்று வெந்து தணிந்தது காடு படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்வு நடந்தது. முதன்முறையாக ஒரு பெரிய ஹீரோ, பார்வை சவால் உள்ள மாணவர்கள் & குழந்தைகளுடன் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களுடன் உரையாடினார்.
பார்வையற்றவர்கள்/குழந்தைகளுக்கான சிறப்பு திரையிடலில் அவர்கள் படத்தை முழுமையாக ரசித்தார்கள். தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ், தான் தயாரிக்கும் அடுத்த படங்களிலும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு திரையிடல் வைப்பதாக உறுதியளித்தார்