வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தினை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது.
'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். சிம்புக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தில் கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் முதல் முறையாக இணைந்துள்ளார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிந்துள்ளனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் குறித்த விழாவில் பேசிய நடிகர் சிம்பு, “இந்த திரைப்படத்தினை பொருத்தவரை, வெளியில் இருப்பவர்கள் யாரும் என் உடலை வைத்து என்னை கிண்டல், கேலி செய்ய வழியில்லை. உருவ கேலி செய்யவில்லை. அது ஒரு தவறான விஷயம். ஒருவருடைய உடலை வைத்து உருவ கேலி செய்யக்கூடாது. சிலர் அதை பண்ணுகிறார்கள், அது யார் என்று சொல்லத் தேவையில்லை, அனைவருக்குமே தெரியும். நம்மை தட்டிவிடத்தான் நிறைய பேர் இருக்கிறார்கள். தட்டிக்கொடுக்க யாரும் இங்கு இல்லை.
இந்த திரைப் படத்துக்காக நான் உடலை குறைத்ததாக சிம்பிளாக சொல்லி விட்டார்கள். ஆனால் என்னை வெச்சு செய்தார்கள் என்பது எனக்குத்தான் தெரியும் (சிரிக்கிறார்). இது எப்படி இருக்கிறது என்றால் திரைப்படத்தில் பார்ப்பது போல ஒரு ஹீரோ நடுரோட்டுக்கு வந்து பின்பு ஒரு ரூபா காயினை சுண்டி விட்டு வேறொரு பாதையை தேர்ந்தெடுத்து மேலே வருவது போல் இருக்கிறது” என்று பேசியிருந்தார்.