பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து அமேசான் ப்ரைமில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

மெட்ராஸ் மாகாணத்தில் 70களில் நடந்த குத்துச் சண்டை போட்டிகளில் மோதிக்கொள்ளும் குத்துச்சண்டை பரம்பரைகளை பற்றிய இந்த ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரைப்படத்தில் சார்பட்டா பரமபரைக்காக ஆர்யா போட்டியிட்டு இறுதியில் ஜெயிக்கிறாரா இல்லையா என்பது தான் கதை.
இந்த படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்து பாராட்டைப்பெற்றுள்ளார் நடிகர் பசுபதி. குறிப்பாக பசுபதியை வாத்தியாராக ஏற்றுக்கொள்ளும் அவரது ரசிகன் கபிலன் எனும் கேரக்டரில் வருவார் இப்படத்தின் ஹீரோ ஆர்யா.
ஆர்யா, இப்படத்தின் ஒரு காட்சியில் தன் வாத்தியார் பசுபதியை சைக்கிளில் அழைத்துச் செல்வார். இந்த காட்சியைக் கொண்டுதான் சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்கள் வலம் வருகின்றன. அவை அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன.
ஆரம்ப காலகட்டத்தில் சுள்ளான், திருப்பாச்சி, தூள் போன்ற படங்களில் மிரட்டலான வில்லனாகவும், ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, இந்தியா பாகிஸ்தான் போன்ற படங்களில் காமெடியிலும் கலக்கியிருப்பார் பசுபதி. இந்நிலையில் பசுபதி நடித்த இந்த காட்சியை வைத்து, “வாத்தியாரே” மீம்ஸ்கள் ட்ரெண்ட் ஆகி வர, இதில் இடம்பெற்றுள்ள ஒரு மீம்க்கு இயக்குநர் வசந்தபாலன் ரியாக்ட் செய்துள்ளார்.
அந்த மீம்ஸை பகிர்ந்த வசந்தபாலன், தமது ஃபேஸ்புக்கில், “பசுபதி என்கிற மகா கலைஞனுக்கு வெயிலுக்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரம். வாழ்த்துகள் பசுபதி சார்” என குறிப்பிட்டுள்ளார்.