இயக்குனர் ஷங்கர் குறித்து பிரபல இயக்குனர் தமது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
தமிழின் முன்னணி இயக்குனரான இயக்குனர் ஷங்கர், தற்போது தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத RC15 என அழைக்கப்படும் தெலுங்கு படத்தையும் இந்தியன் 2 படத்தினையும் இயக்கி வருகிறார். மேலும் ஒரு இந்திப் படத்தில் பணியாற்றவும் ஷங்கர் ஒப்பந்தமாகி உள்ளார். ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை அடுத்து இயக்க இருக்கிறார் ’பிரம்மாண்ட’ இயக்குனர் ஷங்கர்.
இதில் RC15 படத்தின் துவக்க விழா செப்டெம்பர் 8 அன்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை கீரா அத்வானி நடித்து வருகிறார். ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அதேபோல் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தியன் 2 ஷூட்டிங்கில் இயக்குனர் ஷங்கர் குறித்து இயக்குனர் வசந்த பாலன் தமது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "இந்தியன் 2 படப்பிடிப்பிலிருந்து நேரடியாக சில தருணங்கள் -
1995ல் இந்தியன் திரைப்பட படப்பிடிப்பில் பார்த்த அதே மனிதராகவே இருக்கிறார். இயக்குநர் இருக்கையிலிருந்து கேமராவை நோக்கி, நடிகர்களை நோக்கி, துணை நடிகர்களின் ஒழுங்கை சரி செய்ய ஆயிரம் முறை காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஓடி ஓடி தீராதக் காட்சி ஓவியங்களை வரைந்தவண்ணம் இருக்கிறார்.
காட்சி எழுதப்பட்ட அந்த எழுதட்டையில் அந்த காட்சிக்கான கேமராக் கோணங்கள் பென்சிலால் ஒரு தொழிற்நுட்ப பொறியாளரின் வரைக்கோட்டு சித்திரம் போல வரையப்பட்டிருக்கிறது. அந்த சித்திரங்களுக்கு உயிர் கொடுக்கவே வெயில்,புழுதி,நெருப்பு,புகை,உணவு,குடிநீர் என எதையும் கண்டு கொள்ளாது ஒரு வெறி கொண்ட சிங்கம் போல படப்பிடிப்புத் தளத்தில் ஆங்காங்கே உறுமியபடி திரிகிறார். சிங்கத்தின் அசைவுகளை அருகே இருந்து ரசிக்க ஒரு தருணம் கிடைத்தது. பொன் தருணம். அவர் கண்களில் இன்று புத்தம் புதியதாய் பிறந்த குழந்தையின் ஆர்வமும் மினுமினுப்பும் ஆச்சரியமும் சிரிப்பும் கலந்திருக்கிறது.
அவரின் வெற்றியின் ரகசியம் அது தானோ....ஒரு காட்சித்துணுக்கு நன்றாக வரும் போது மைக்கில் படப்பிடிப்பு தளத்தில் நடித்த அனைவரையும் பாராட்டுகிறார்...அரங்கம் கைதட்டி அதிர்கிறது...மாஸ்டர் பாராட்டும் போது அதை விட ஆடுகளத்திற்கு வேறு என்ன பேரானந்தம். சூரியன் வேறு ஆடை பூண்டு மாலையை மணக்கும் போது மீண்டும் கேப்டனின் குரல் இன்றைய நாளின் படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என கூறும் போது படப்பிடிப்பு தளமெங்கும் சோர்வு மறைந்து நேர்மறை எண்ணங்கள் மின்மினி பூச்சி போல திசையெங்கும் ஒளிவெள்ளமாய் பரவுகிறது.
படப்பிடிப்பு முடிந்து அனைவரும் கூடடைந்த பிறகும் படப்பிடிப்பு தளத்தில் அடுத்த நாள் காட்சிக்கான தயாரிப்பு வேலைகளை ஒரு உருவம் தனி ஒருவனாய் செய்த வண்ணம் இருக்கிறது. இரவு நீள்கிறது. இந்தியாவின் பெருமைமிக்க இயக்குநராக இருப்பதற்காக அத்தனை தன்மைகளையும் பெருமைகளையும் திறமைகளையும் தன்னுள் கொண்ட இயக்குநர் ஷங்கர் தான் அவர்" என வசந்த பாலன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.