நடிகர் விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்த திரைப்படம் 'வாரிசு'.
இந்த திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி இருந்தார். மேலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இவர்களுடன் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், யோகி பாபு, ஜெயசுதா, சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் வாரிசு திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றதுடன் மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் 300 கோடி ரூபாயை உலக அளவில் கடந்ததாக அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல, இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் திரைப்படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தார் இசையமைப்பாளர் எஸ் தமன். முன்பு கூறியது போலவே, விஜய்க்காக படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என அனைத்துமே பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடிக்கும் வகையில் உருவாக்கி இருந்தார் தமன்.
அதிலும் குறிப்பாக நடிகர் விஜய் பாடிய "ரஞ்சிதமே" பாடல், ரிலீஸ் ஆன நாள் முதல் இன்று வரையிலும் பலரின் பிளேலிஸ்ட்டிலும் இருந்து வருகிறது. இந்த பாடலில் விஜய்யின் குரலுடன் அவரது நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இதன் கடைசியில், சுமார் ஒன்றறை நிமிடம் விஜய் தனியாக ஆடும் ஸ்டெப்கள் வரும். அதிலும் பட்டையை கிளப்பி இருப்பார் விஜய்.
இந்த நிலையில், ரஞ்சிதமே பாடலில் நடிகர் விஜய்யுடன் இணைந்து அவர் அருகே நின்று ஆடி இருக்கும் பெண் ஒருவர் குறித்த செய்தி தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
ரஞ்சிதமே பாடலில் விஜய்க்கு அருகே சிவப்பு நிற புடவை அணிந்தபடி ஒரு இளம்பெண் நடனமாடி இருப்பார். மிகவும் எனர்ஜியுடன் பட்டையைக் கிளப்பி இருந்த அவரது நடனம் தான் தற்போது அவரை இணையவாசிகள் மத்தியில் கவனம் பெற வைத்துள்ளது. விஜய் அருகே ஆடுவதால் டக்கென பார்வையும் அவர் பக்கம் போன நிலையில், அந்தப் பெண்ணின் பெயர் அம்பிகா கோலி என்பது வரை தற்போது வெளிவந்துள்ளது.
மேலும் மும்பையைச் சேர்ந்த இவர் ஏராளமான பாலிவுட் திரைப்படங்களிலும் பேக்ரவுண்ட் டவுன்சராக ஆடியுள்ள சூழலில், பல பிரபலங்களுடன் அம்பிகா கோலி இருக்கும் புகைப்படங்களும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.