ஊடகங்களின் முன்னிலையில் பேசினாலே தான் பதட்டமாகிவிடுவதாக தெரிவித்திருக்கிறார் தில் ராஜு.
தமிழகத்தில் வரும் பொங்கலுக்கு விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் அஜித் நடிக்கும் துணிவு ஆகிய இரண்டு படங்களுமே ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் இருவரது ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகின. இப்படத்திற்கு, இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வாரிசு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றியுள்ளார்.
அதேபோல, H. வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகிவரும் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதனிடையே, சென்னை நகரம், கோவை, வட மாற்றும் தென் ஆற்காடு பகுதிகளில் வாரிசு படத்தையும் உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலமாக ரிலீஸ் செய்ய இருக்கிறார்.
இதனிடையே, வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, தெலுங்கு சேனல் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில், "தமிழ்நாட்டில் நடிகர் விஜய் நம்பர் ஒன் நடிகர். இது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை வாரிசு & துணிவு படத்திற்கு சரி பாதியாக ஒதுக்கீடு செய்தது ஏற்புடையதல்ல. வாரிசு படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். எனவே இந்த தியேட்டர் பங்கீடு குறித்து உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளேன்" என தில் ராஜூ கூறியிருந்தார்.
இந்நிலையில், தெலுங்கு பட வெளியிட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் தில் ராஜு,"மீடியா முன்னிலையில் பேசுவது என்றாலே பதட்டமாகிறது. நான் என்ன பேசினாலும் அது சர்ச்சையாகி விடுகிறது. சமீபத்தில் ஒரு சேனலுக்கு 45 நிமிஷம் பேட்டி கொடுத்திருந்தேன். அதில் இருந்து 20 வினாடி நீளமுள்ள வீடியோவை மட்டும் கட் செய்து பலரும் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வீடியோவை முழுவதுமாக பார்த்திருந்தால் நான் சொல்ல வந்தது என்ன என்பது தெரியவந்திருக்கும். நான் மீடியாவுக்கு ஒரு கோரிக்கை முன்வைக்கிறேன். அது என்னவென்றால் அந்த 20 வினாடி வீடியோவை வைத்து யாரையும் ஜட்ஜ் பண்ணாதீங்க. யாரையும் கிண்டல் செய்வது எனது நோக்கமல்ல. சினிமாவில் நான் சாதிக்க நிறைய இருக்கு" என்றார்.