கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவை சேர்ந்த 15 வயதான கருவுற்ற யானைக்கு பசியெடுக்கவே, உணவு தேடி மலப்புரத்திலுள்ள கிராமத்துக்கு சென்றது. அங்கிருந்த மக்கள் அதற்குத் தேவையான உணவுகளை வழங்கினார்கள். ஆனால் சில மர்ம நபர்கள் பட்டாசு வைக்கப்பட்டுள்ள பைனாப்பிள் பழத்தையும் கலந்து அளித்துள்ளனர். இதன் காரணமாக அந்த யானைக்கு வாய் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடுமையான வலி காரணமாக யானையால் அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை. தாங்கவியலாத வலியுடன் யானை அருகில் உள்ள ஆற்று நீரில் இறங்கி, உயிரிழந்துள்ளது. பின்னர் வனத்துறையினரால் அந்த யானை கைப்பற்றப்பட்டு, காட்டுப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. அந்த யானையை உடல் கூறாய்வு செய்த மருத்துவர்களுக்கு, யானை கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் யானை உயிரிழந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. iஇது குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டரில் கண்டனப் பதிவொன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது,
'நான் சொன்னது போல் அரக்கர்கள் இத்தகைய மக்கள்தான்.. பரிதாபத்துக்குரிய விலங்குகள் அல்ல. கல்வியறிவுக்கு மனித நேயத்துக்கும், பொது அறிவுக்கும் பச்சாத்தாபத்துடன் இருப்பதற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று இந்த சம்பவம் நிரூபித்துவிட்டது. !! வெறுப்படைந்தேன் .. இந்த அரக்கர்களுக்கு கொரோனா இவந்து அவர்கள் செத்துவிடுவார்கள் என்று நம்புகிறேன்!' என்று பதிவிட்டுள்ளார்
இந்த துயரமான சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது விலங்குகள் மீது நடத்தப்படும் கொடுமைக்கு எதிராக மிகவும் கடுமையான சட்டம் தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்தும்விதமாக #StopcCrueltytToAnimals, #JusticeForMotherElephant, #AnimalCare போன்ற பல்வேறு ஹாஷ்டேக்குகளை உருவாக்கி உள்ளனர். விலங்களுக்கு எதிரான தாக்குதலை தடுக்க சமூக ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிகையான இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ், அங்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள, இந்திய வனத்துறை அதிகாரி ஏ.பி. க்யூமை பேட்டியெடுத்து செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறும்போது, ''யானைக்கு யாரும் அண்ணாசி பழத்தில் வெடி மருந்து வைத்துக் கொடுக்கவில்லை என நினைக்கிறேன். அதே நேரத்தில் காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களைக் காப்பதற்காக வைக்கப்பட்டிருந்த, வெடி மருந்து நிரப்பப்பட்ட அண்ணாசி பழங்களை யானை உண்டதாகத் தெரிகிறது.
அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், விலங்குகளிடம் இருந்து தங்களையும், தங்களது பயிர்களையும் பாதுகாத்துக் கொள்ள இதுபோன்று செய்கிறார்கள். மேலும் காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களைக் காப்பதற்காக வலைகளை வைத்துள்ளார்கள். அதில் சில நேரம் காட்டுப் பன்றிகள் மட்டுமல்லாது, மற்ற சில விலங்குகளும் சிக்கிவிடுகிறது. இறந்த யானைக்கு 15 வயது. அதன் மரணம் அனைவரின் மனதிலும் நீங்காத ரணத்தை ஏற்படுத்திவிட்டது'' என அவர் கூறியுள்ளார்.