அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
Also Read | PS1 : “ராஜராஜ சோழனை ஏன் பொன்னியின் செல்வன்னு சொல்லணும்?” - இதான் காரணமா? விளக்கும் ஆய்வாளர்.!
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் ஆதித்ய கரிகாலன், அருண்மொழிவர்மன், வந்தியத்தேவன் 3 கேரக்டர்களும் ஒரே ஃப்ரேமில் தோன்றும் ஸ்கிரீன் ஷாட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதை பார்த்த பலரும், பொன்னியின் செல்வன் நாவலில் இதுபோன்று கதையில் ஆதித்ய கரிகாலன்(திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலன்), அருள்மொழிவர்மன் (திரைப்படத்தில் அருண்மொழிவர்மன்), வந்தியத்தேவன் மூவரும் ஒன்றாக சந்தித்துக்கொள்ளவே மாட்டார்கள். அப்படியானால் படத்தில் மூவரும் ஒரே ஃப்ரேமில் வருகிறார்களே? திரைப்படத்துக்காக சில விஷயங்கள் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறதா? என்றெல்லாம் பேசி வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் புதினத்தில் ஆதித்த கரிகாலன் ஒரு கெஸ்ட் ரோல் அளவுக்குதான் வந்து போவார். அவருடைய சகோதரரான பொன்னியின் செல்வனை (பிற்காலத்தில் ராஜ ராஜ சோழன்) மையமாக வைத்தே கதை சுழலும் என்றும் சில வாசகர்கள் கூற, இன்னும் சிலர் திரைப்படத்தை பொறுத்தவரை, ஆதித்த கரிகாலனை (விக்ரம்) கொன்ற பழி வந்தியத்தேவன் (கார்த்தி) மீது விழ, அதில் இருந்து எப்படி வந்தியத்தேவன் மீள்கிறார், நந்தினியின் செயல்பாடு எவ்விதம் இருக்கபோகிறது என்கிற ஒரு புனைவுறு வட்டத்தை சுற்றி இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.
அதே சமயம் உண்மை வரலாற்றில் ஆதித்ய கரிகால சோழன் மரணிக்கும்போது ராஜ ராஜ சோழன் 3 வயது மதிக்கத்தக்க குழந்தையாக இருந்தார் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
எனினும் வந்தியத்தேவன், அருண்மொழிவர்மன், ஆதித்த கரிகாலன் மூவரும் ஒன்றாக குதிரையில் வலம் வரும் போஸ்டர், படத்தின் ப்ரோமோஷனுக்காக எடுத்த ஷாட் என்றும், உண்மையில் படத்தில் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றும், அப்படியே நாவலில் இருந்து சில விஷயங்களை, திரைச்சுவைக்காக இயக்குநர் மணிரத்னம் மாற்றி அமைத்திருந்தாலும், திரையில் அப்படி இருந்தால் படமாக பார்க்கும்போது நன்றாக இருக்கும், ஏனென்றால் இத்தனை பெரிய நாவலை 2 பாகங்களாக அடக்கி உள்ளங்கை நெல்லிக்கனியை போல் தருவது என்பது பெரிய விஷயம் என்றும் கூறிவருகின்றனர்.
லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
Also Read | ‘பழுவேட்டரையர் - நந்தினி காதல்’.. ‘நந்தினி அழகை போற்றும் வந்தியத்தேவன்’ .. PS1 கேரக்டர் பின்னணி