ஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது என்று கிரேஸி மோகன் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்
பிரபல நடிகரும், கதை-வசனகர்த்தாவும், நாடக ஆசிரியருமான கிரேஸி மோகனுக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2 மணிக்கு உயிர் இழந்தார். கிரேஸி மோகனின் கடைசி நிமிடங்களின்போது அவருடன் உலக நாயகன் கமல் ஹாஸன் இருந்துள்ளார். மோகனின் நெற்றியில் கைவைத்து பிரியாவிடை கொடுத்ததாக கமல் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து கிரேஸி மோகன் பற்றி ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,
கிரேசி மோகன் மறைவு எதிர்பாராதது. ஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது. அவர் வெறும் நாடக ஆசிரியர் மட்டும் அல்லர். வெண்பா எழுதத் தெரிந்த விகடகவி. யாரையும் வருத்தப்படவைக்காத நகைச்சுவையாளர் எல்லாரையும் வருந்தவிட்டுப் போய்விட்டார். சோகம் மறைந்து போகும்; நகைச்சுவை நிலைக்கும் என்று தெரிவித்துள்ளார். கிரேஸி மோகனை அண்மையில் சந்தித்து பேசியவர்கள் அனைவரும் சொல்வது, நான் பார்த்தபோது நல்லா தானே இருந்தார், இப்படி திடீர்னு போவார்னு எதிர்பார்க்கவில்லையே என்பது தான். நல்ல ஆரோக்கியமாக இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்படும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்காதது நடப்பது தானே வாழ்க்கை என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.