வரும் ஜூன் 4ம் தேதி தங்களது ஒ.டி.டி. தளத்தில் தி ஃபேமலி மேன் வெப் சீரிஸ் வெளியாகும் என அமேசான் அறிவித்துள்ளது.
மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி உள்ளிட்டோருடன் இணைந்து சமந்தாவும் நடித்துள்ள இந்த தொடரில் பிரபல தமிழீழத் தமிழர்களை தீவிரவாதியாகவும் ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளாகவும் சித்தரித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் ‘தி ஃபேமலி மேன் 2’ எனும் இந்த இந்தித் தொடரை தடை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடிப்பில் அமேசான் ஓடிடியில் வெளியான இந்த ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் ஒரு உளவாளியின் வாழ்க்கையை கருவாக கொண்ட கதையாக பிரபலமானது. இப்படி இந்த சீரிஸின் முதல் பாகம் வெற்றி அடைந்ததை அடுத்து இப்போது வெளியாக இரண்டாம் பாகத்தின் டிரெய்லரில் தான் மேற்கண்ட சர்ச்சை எழுந்துள்ளது.
அந்த கடிதத்தில், இந்தியில் வெளியாவதாக குறிப்பிடப்பட்டுள்ள, சமூக வலைதளங்களில் உலா வரும் தி ஃபேமலி மேன் 2 தொடரின் டிரெய்லரில் தமிழர்கள் பயங்கரவாதிகளாகவும் , ஐஎஸ்ஐ ஏஜெண்டுகளுடன் தொடர்புள்ளவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதன் மூலம் தமிழ் ஈழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த ஈழப் போராளிகளின் போராட்டங்கள் கொச்சைப்படுத்தப் பட்டுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இது படைப்புச் சுதந்திரம் அல்லது கருத்துச் சுதந்திரம் என ஒரு சாரரும், தி ஃபேமலி மேன் 2 வெப் சீரிஸுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ் ஆதரவு அமைப்பு சார்ந்த இன்னொரு சாரரும் வலியுறுத்தி வருவதை காண முடிகிறது. இதன் ஒரு அம்சமாக இந்த தடை விதிப்பு கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் இந்த சீரிஸில் ராணுவ சீருடை அணிந்த சமந்தா என்கிற தமிழ் பெண் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாகக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், இப்படியான காட்சிகளைக் கொண்ட இந்தத் தொடர் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது என்றும் இவை தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாய் அமைவதாகவும் குறிப்பிட்டுள்ள வைகோ, இந்தத் தொடரை எதிர்த்து தமிழ்நாட்டில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தத் தொடரை அமேசான் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் குறிப்பிட்ட வைகோ, தி ஃபேமலி மேன் 2 தொடரை ஒளிபரப்பைத் தடை செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக கோரியுள்ளார்.
முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இந்த வெப் சீரிஸ் தடை செய்யப்பட வேண்டும் என்று கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: 'இந்த' குக் வித் கோமாளி பிரபலம் யார்னு தெரியுதா? ட்ரெண்ட் ஆகும் Throwback புகைப்படம!!