'களத்தூர் கண்ணம்மா' திரைப்படம் மூலம் திரையுலகில் தனது 5 வயதில் நடிகராக அறிமுகமான உலக நாயகன் கமல்ஹாசன் இந்த வருடத்துடன் திரைக்கு வந்து 60 வருடங்களை நிறைவு செய்கிறார்.
இந்த 60 வருடங்களில் நடிகராக மட்டுமல்லாமல் நடன இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பல்வேறு துறைகளிலும் உச்சம் தொட்டுள்ளார். இதனை முன்னிட்டு அவரை சிறப்பிக்கும் விதமாக நேற்று (நவம்பர் 17) இசைஞானி இளையராஜாவின் இசையுடன் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயம் ரவி, பார்த்திபன், கார்த்தி, தேவி ஸ்ரீ பிரசாத், தமன்னா, வடிவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த விழாவில் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்தில் வடிவேலு நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
'தலைவன் இருக்கிறான்' திரைப்படத்தை ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.