நடிகர் விவேக் காலமான செய்தி திரைத்துறையினரையும், ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சின்ன கலைவாணர் என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட விவேக், பத்மஸ்ரீ உட்பட பல விருதுகளை பெற்றுள்ள சிறந்த சமூக ஆர்வலரும் ஆவார்.

மாரடைப்பால் சென்னை வடபழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விவேக், இன்று (17.4.21) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று காலை 11:00 மணியளவில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனரி ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் கிரிட்டிகலான நிலையில் எக்மோ (எக்ஸ்ட்ரா கோர்போரல் மெம்பிரேன் ஆக்ஸிஜனேற்றம்) சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் முந்தைய நாள் கோவிட் தடுப்பூசி விவேக் எடுத்துக்கொண்டது அவரது உடல்நலக்குறைபாட்டுக்கு காரணம் அல்ல என்றும் தமிழக சுகாதாரத் துறை தரப்பிலும் கோவிட் தடுப்பூசி காரணமாக இல்லாமல் இருக்கலாம் என மருத்துவமனை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.