நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் தமிழ் - தெலுங்கு திரைப்படம் 'வாத்தி'. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த படத்திற்கு தமிழில் "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டு இப்படம் பிப்ரவரி 17 முதல் திரையரங்கில் ஒளிபரப்பாகிறது.
தெலுங்கில் சார் (Sir) என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள்ளது. கல்வித்துறையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது. இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக நவீன் நூலி , இசையமைப்பாளராக G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.
இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடிக்கிறார்கள். கல்வித்துறையை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் டிரெய்லரில், “படிப்பு பிரசாதம் மாதிரி குடுங்க. 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மாதிரி கொடுக்காதீங்க” என்கிற வசனம் வரும். அந்த ஒற்றை வரிகளே கதையின் தன்மையை புரியவைக்கிறது. ஆம், கல்வி வியாபாரமாக்கப்படுவதையும், தவறான ஆட்கள் கையில் சிக்கிக் கொள்வதையும் அதை எதிர்க்கும் நல்லாசிரியரின் பார்வையில் இருந்து விவரிக்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி கூறியிருக்கும் கருத்து கவனம் பெற்று வருகிறது. அதன்படி வாத்தி திரைப்படம் கல்வியில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதாக பேசியிருக்கிறது. அப்படி இருக்கும் போது, “ஒருவேளை மத்திய கல்வித்துறை அமைச்சராக நீங்கள் ஆனால் என்ன விதமான மாற்றத்தை செய்வீர்கள் அல்லது புகுத்துவீர்கள்?” என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த வெங்கி அட்லூரி, “ஒருவேளை நான் மத்திய கல்வித்துறை அமைச்சராகும் பட்சத்தில் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஒழித்து விட்டு பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு முறையை கொண்டு வர நினைப்பேன். ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்பது என்னுடைய கருத்தாக இருக்கும். இது சற்றே சர்ச்சையாக இருக்கலாம்” என்று தெரிவித்தார். இவருடைய இந்த கருத்து பரலான கவனத்தைப் பெற்று வருகிறது.