இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும் தொழிலதிபரின் மகன் ரோஹித் தாமோதரன் என்பவருக்கும் திருமணம் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கு கருதி எளிமையான முறையில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து பாதுகாப்பான முறையில் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மதிப்பிற்குறிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மணமக்களை நேரில் வந்து வாழ்த்தி ஆசீர்வதித்து இந்த நாளை மறக்கமுடியாத நாளாக மாற்றியதற்கு மனமார்ந்த நன்றி. மேலும் மனக்களை வாழ்த்த வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இதயம் கணிந்த நன்றி" என நெகிழ்ச்சியாக ட்வீட் செய்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று குறைந்து இயல்புநிலை திரும்பியவுடன் முக்கியப் பிரமுகர்கள், திரையுலகத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.