கமல்ஹாசன் அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகையை சந்தித்த புகைப்படம் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்தது.
இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்தனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது. இதுவரை வெளியான தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது.
ஒடிடியில் வெளியான பின்னும் இந்த படம் வெற்றிகரமாக இன்னும் நகர்ப்புறத்தில் உள்ள சில திரையரங்குகளில் 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடுகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.
இச்சூழலில் நடிகர் கமல்ஹாசன் ஹாலிவுட் நடிகை மெக்கென்சி கேட் வெஸ்ட்மோரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து நடிகை மெக்கென்சி கேட் வெஸ்ட்மோர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "இந்த வாரத்தின் உச்ச நிகழ்வு கமல்ஹாசனை சந்தித்தது. அவரின் நிறுவன கதர் ஆடையை அணிந்து என்னுடைய நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு ஆர்வமாக உள்ளேன்" என கூறியுள்ளார்
மேலும் நடிகை மெக்கென்சியின் தந்தை ஆஸ்கார் விருது வென்ற பிரபல மேக்கப் நிபுணர் மைக்கேல் வெஸ்ட்மோர் ஆவார். இவர் கமல்ஹாசனின் இந்தியன், அவ்வை சண்முகி மற்றும் தசாவதாரம் படங்களில் மேக்கப் நிபுணராக பணியாற்றியவர்.
விரைவில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்க உள்ள நிலையில் மைக்கேல் வெஸ்ட்மோரை கமல்ஹாசன் சந்தித்துள்ள நிகழ்வு இணையத்தில் டிரெண்ட் ஆகி உள்ளது.