கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது.
இதனை அடுத்து திமுக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியது. மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் ஆசி பெற்ற அவருடைய மகன் மற்றும் தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது தமிழக முதல்வராக பதவி ஏற்றிருக்கிறார்.
இதனிடையே சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும் இளம் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் முதல் முறையாக இன்று எம்எல்ஏவாக பதவி ஏற்றிருக்கிறார்.
இந்த பதவியேற்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “சட்டமன்றப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற உதயநிதி ஸ்டாலின் எனும் நான், சட்ட முறைப்படி நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மேல் உண்மையான நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும் நான் மேற்கொள்ளவிருக்கும் கடமையை நிறைவேற்றுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்” என்று குறிப்பிட்டு கையெழுத்து போட்டார்.