'வெந்து தணிந்தது காடு' படம் பார்த்த பிறகு உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வெந்து தணிந்தது காடு படம் இன்று செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில் நடிகர் & தமிழக வினியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் வெந்து தணிந்தது காடு படத்தினை பார்த்த பிறகு தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "கௌதம் மேனன் மற்றும் சிலம்பரசன் காம்போ மீண்டும் பெரியதாகவும் சிறப்பாகவும் உள்ளது! வெந்து தணிந்தது காடு இந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் ஆல் தி பெஸ்ட் ஐசரி கே கணேஷ்" என ட்வீட் செய்துள்ளார்.
'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். சிம்புக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக எழுத்தாளராக இணைந்துள்ளார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிந்துள்ளனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
'வெந்து தணிந்தது காடு’ படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். வெந்து தணிந்தது காடு படத்திற்கு இந்திய அரசின் சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.