இயக்குனர் அருண் காமராஜ் - நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் உருவாகியுள்ள 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, தற்போது வெளிவந்துள்ளது.
ராஜா ராணி, மான் கராத்தே, மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தவர் அருண் காமராஜ்.
நடிப்பு மட்டுமில்லாது, திரைப்பாடல் எழுதி பாடல்கள் பாடவும் செய்துள்ள அருண் காமராஜ், 'கனா' என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருந்தார்.
ஆர்டிக்கிள் 15 ரீமேக்..
கனா பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்ததை அடுத்து, தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து, 'நெஞ்சுக்கு நீதி' என்னும் திரைப்படத்தையும் அருண் காமராஜ் இயக்கி முடித்துள்ளார். அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில், ஆயுஷ்மான் குரானா நடிப்பில், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் 'ஆர்டிக்கிள் 15'. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த படத்தின் அதிகாரபூர்வ் ரீமேக் தான் 'நெஞ்சுக்கு நீதி'. போலீஸ் கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நிலையில், அவருடன் ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். இதன் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் டீசர், மக்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. போனி கபூர் தான் அஜித் குமாரின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்திருந்தார். தொடர்ந்து, ஹெச். வினோத் - அஜித் குமார் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தையும் தயாரிக்கவுள்ளார்.
நெஞ்சுக்கு நீதி ரிலீஸ் எப்போது?
இந்நிலையில், நெஞ்சுக்கு நீதி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை போனி கபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி, மே 20 ஆம் தேதி, திரையரங்குகளில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகும் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, வினோத் ராஜ்குமார் மற்றும் லால்குடி இளையராஜா ஆகியோர் கலை இயக்குனர்களாக பணிபுரிந்துள்ளனர்.