ஆபாச வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டதற்காக பிரபல யூடியூபர் பப்ஜி மதன் கடந்த ஜூன் 18-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டதுடன், போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். இதனிடையே கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் தான் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் போலீசார் பப்ஜி மதனை ஆஜர்படுத்தி உள்ளனர். இதில் கிருத்திகா மற்றும் பப்ஜி மதனின் பெற்றோர் மதனை சந்திக்க வந்தனர்.
பப்ஜி மதன் அறிவுரை கழகத்தில் ஆஜராகி தன் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய தன் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம் என்பதுதான் இந்த செயல்பாடு. இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மாசிலாமணி, ரகுபதி, ராமன் ஆகியோர் முன் ஆஜரானார் மதன்.
அப்போது வாதிட்ட மதனின் மனைவி, “தடை செய்யபட்ட ஆன்லைன் விளையாட்டை மதன் விளையாடவில்லை. சீன செயலிதான் தடை செய்யப்பட்டதே தவிர, கொரியா வெர்ஷன் அல்ல. அதைத்தான் ஆன்லைனில் விளையாடி பதிவேற்றினோம். குண்டர் தடுப்பு சட்டம் பாயும் அளவுக்கான தவறல்ல அது. சாதாரண சட்ட பிரிவுகளே நடவடிக்கை எடுப்பதற்கு போதுமானதுதான்” என தெரிவித்தார்.
இதனை அடுத்து, முழு வாதத்தை கேட்ட பின்பு, பப்ஜி மதனை சிறையிலடைக்க போலீசார் அவரை அழைத்து செல்லும் வேனில் ஏற்றினர். அந்த வேன் கிளம்பும் முன், பப்ஜி மதனும் அவரது மனைவி கிருத்திகாவும் சில மீட்டர் தூரம் தள்ளி இருந்தபடி நலம் விசாரித்துக் கொண்டனர்.
அப்போது பப்ஜி மதன் தனது மனைவியிடம், “நாம வெச்சிருக்குற 2 கார்களுமே சொகுசு கார்கள் தான். இனி நம்ம கிட்ட சொகுசு கார் இல்லனு வெளியில சொல்லிக்கிட்டு இருக்காத..” என்று அறிவுரை கூறியதாக தகவல்கள் பேசப்பட்டு வருகின்றன.
மேலும், காவல் ஆணையர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த இரண்டு கார்களையும் வழக்கறிஞர்களின் உதவியுடன் வெளியே எடுத்து விடுமாறும் அவர் தம் மனைவிக்கு அறிவுரை கூறியதாகவும் தெரிகிறது.