இன்ப அதிர்ச்சி:
இன்று படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதோடு படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினி என்ற முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அதுபோலவே திரிஷா குந்தவை பிராட்டியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த இரு கதாபாத்திரங்களும் பொன்னியின் செல்வன் நாவலில் மிக முக்கியமான கதாபாத்திரங்களாக அமைந்து கதையை முன்னோக்கி எடுத்துச் செல்பவை. இந்த இரு கதாபாத்திர போஸ்டர்களும் இப்போது இணையத்தில் வைரலாக பரவ, பொன்னியின் செல்வன் வாசகர்கள் தங்கள் கற்பனைகளில் இருக்கும் கதாபாத்திரங்களோடு இந்த புகைப்படங்களை ஒப்பிட்டு தங்கள் கருத்துகளைப் பகிர ஆரம்பித்துள்ளனர்.
இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படைப்பு
கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணி ரத்னம் இயக்கி வருகிறார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
சோழப் பேரரசுக்கு வரும் ஆபத்து:
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதை “பொன்னியின் செல்வன்”. இது அனைவரும் அறிந்ததே. இதைத் திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சோழப் பேரரசின் பொற்காலம் துவங்கும் இந்தக் கால கட்டத்தைத் திரைக்குக் கொண்டு வர ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உழைத்து வருகின்றனர்.
நட்சத்திர பட்டாளம்:
இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படைப்பான இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரதகுமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிரம்மாண்டமாக அரங்கங்களை தோட்டா தரணி அமைக்க, கல்கியின் நாவலான பொன்னியின் செல்வனின் திரை வடிவத்துக்கு ஜெயமோகன் வசனங்களை எழுதுகிறார். பாடல்களை இளங்கோ கிருஷ்ணன் எழுத பாடல்களுக்கான நடனத்தை பிருந்தா வடிவமைத்துள்ளார்.