உலகமே கொரோனா வைரஸ் நோயின் அச்சத்தில் இருப்பதால், இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் படங்களின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் நடிப்பில் வெளியாகவிருந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் டாப் கன் மேவரிக் (Top Gun Maverick). இதன் ரிலீஸ் தேதி 2020 ஜூனிலிருந்து 2020 டிஸம்பர் மாதம் தள்ளிவைக்கப்பட்டதாக டாம் குரூஸ் அறிவித்துள்ளார்..
'Top Gun Maverick'-ன் முதல் பாகத்தை அடுத்து 34 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் தொடர்ச்சி ஜூன் மாதம் திரைக்கு வரவிருந்தது, ஆனால் இப்போது 2020 டிஸம்பரில் வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழுவினரும் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில், டாம் குரூஸின் கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமானது. அவர் ஒரு சீனியர் டெஸ்ட் பைலட்டாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவரது பெயர் பீட் மேவரிக் மிட்செல். யுஎஸ்ஏஎஃப் டாப் கன் திட்டத்தில் (USAF Top Gun Program) உள்ள ஒரு குழுவிற்கு முக்கியத்துவமான மற்றும் ஆபத்தான ஒரு பணிக்காக பயிற்சியளிக்கும் வேலை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இடையில் சில பிரச்னைகள் ஏற்பட, அவர் தனித்து செயல்படும் நிலை ஏற்படுகிறது. ஆபத்தான சாகஸமான அந்த வேலையை ஒத்தை ஆளாக சமாளித்தாரா அல்லது குழுவினர் அவருக்குக் கைகொடுத்தார்களா என்பதை படம் வெளிவந்ததும் பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும்.
57 வயதான டாம் குரூஸ் இப்படத்தைப் பற்றிய தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, ‘பலர் இந்தப் படத்துக்காக 34 ஆண்டுகள் காத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். துரதிர்ஷ்டவசமாக, இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது. USAF Top Gun: Maverick இந்த டிஸம்பரில் உங்களை அசத்துவான். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், '' என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.