பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் பிரதாப், ஷபீர் கல்லரக்கல் மற்றும் பலர் நடிப்பில் உருவான திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த திரைப்படத்தில், சார்பட்டா பரம்பரை எனும் பிரபல குத்துச்சண்டை மரபுக்கு பெயர் போன ஒரு அணியை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். காலம் காலமாக பெரும் மரியாதையுடன் வழங்கப்பட்டு வந்த சார்பட்டா பரம்பரை இறுதியில் ஆர்யாவின் மூலம் ஜெயித்து, தம் கௌரவத்தை நிலைநிறுத்தியதா என்பதுதான் கதை.
ஜனரஞ்சக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் நல்ல வெற்றி பெற்ற இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு பிறகு குத்துச்சண்டை மரபை தொடரக்கூடிய ஒரு அணியை பரம்பரை என்று அழைக்கும் சொல்லாடல் பிரபலமானது.
இந்நிலையில்தான் டோக்கியோவில் நடக்கும் 2020 ஒலிம்பிக் போட்டியில், சண்டை போட்டிக்கு வீரர் ஒருவரை தயார்படுத்தி அனுப்பும் கோச் செய்த செயல் வீடியோவாக வைரலாகி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாத சூழ்நிலையில் ஒரு கோச் ஒரு வீரரை பளார் பளார் என்று அறை விட்டு ஆசீர்வதித்து சண்டை போட்டிக்கு அனுப்புகிறார்.
இதை பகிர்ந்த பலரும், இது என்ன பளார் பளார் பரம்பரையா? ஒண்ணு விட்ட பரம்பரையா? என்றெல்லாம் பேசி கலாய்த்து வருகின்றனர். இந்த வீடியோவை பிரபல திரைப்பட மற்றும் சீரியல் நடிகை டாக்டர் ஷர்மிளா தம் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து , ‘மொரட்டு கோச்சிங் போல ..இது என்ன பரம்பரை னு தெரியல’ என்று கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.