கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு வரும் 26.04.2021 முதல் புதிய லாக்டவுனை அறிவித்திருக்கிறது.
அதன்படி தளர்வுகளுடன் கூடிய சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால், வேகமாக பரவி வரும் தொற்றை தடுக்கும் வகையிலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் கீழ் இந்த புதிய கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதன்படி அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூடங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இயங்குவதற்கு அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் வணிக வளாகங்கள், பெரிய கடைகள் இயங்குவதற்கும் அனுமதி இல்லை என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. மேலும் சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளிலும் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்குவதற்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த முறை அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் இந்த அம்சங்கள் இருந்தாலும் இப்போது புதிய தளர்வுகளுடனும் கட்டுப்பாடுகளுடனும் 30.04.2021 நள்ளிரவு 12 மணி வரை இந்த கட்டுப்பாட்டு விதிகள் நீட்டிக்கப்பட்டு இருக்கின்றன.
முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த திரையரங்குகளுக்கான 50 சதவீத இருக்கை அனுமதி என்பது பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்பட நேரத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு 100% இருக்கையாக அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் அண்மையில் 25.03.2021ல் அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் மீண்டும் 50 சதவீத இருக்கைக்கு அனுமதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் திரையரங்குகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதனிடையே கங்கனா ரனாவத்தின் தலைவி, சசிகுமார் நடித்த எம்ஜிஆர் மகன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதற்கு தயாராக இருந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையால் இந்த படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனதாக அந்த படக்குழுக்களின் தரப்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் சில புதிய படங்கள் சில ஓடிடி தளங்களில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.