தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விதிமீறல்கள் நடந்திருப்பதாக சில தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில், விஷால் தலைமையிலான நிர்வாகம் கலைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டி, சங்க தலைவர் பொறுப்பில் இருந்து நடிகர் விஷால் பதவி விலக வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு சில தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்தினர். அதனை சட்டப்பூர்வமாக எதிர்க் கொண்ட விஷால் பூட்டை உடைத்து சங்க நிர்வாக பொறுப்புக்களை கவனித்து வந்தார்.
இந்நிலையில், விஷால் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் அளித்த புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கலான வழக்குகளின் அடிப்படையில், சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் ஆய்வு செய்தது. அந்த ஆய்வின்படி தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாக பொறுப்பை ஏற்றுக் கொள்ள மாவட்ட பதிவாளர் என்.சேகர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் குழு முற்றிலுமாக கலைக்கப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி, நடிகர் விஷால் தலைமையிலான அணியின் பதவிக்காலம் முடிவடைய ஒராண்டு இருக்கும் போதே, சங்கத்திற்கு தேர்தல் நடத்தி புதிய குழுவை தேர்ந்தெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விஷால் தரப்பினர் நீதிமன்றத்தை நாடி, புதிய நிர்வாகி நியமனத்திற்கு தடை கேட்க திட்டமிட்டிருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் இந்த அதிரடி முடிவு குறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டில், ‘இன்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு சோகமான தினம் என்றும், இது அவமானம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.