Russia-Ukraine War: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிறப்பித்த புதிய உத்தரவின்படி உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ள விவகாரம் சர்வதேச அளவில் பெரும் போர்ப்பதற்றத்தை உண்டுபண்ணியுள்ளது.
போர் பதற்றம்..
இதனால் பல ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து வருகின்றனர். உக்ரைன் அரசாங்க இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், வெடிகுண்டு பயம் இருப்பதாகவும் தொடர் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனிடையே உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்திய மாணவர்களை விமானங்கள் மூலம் மீட்க, இந்திய மத்திய - மாநில அரசுகள் ஆலோசித்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றன.
சிக்கித்தவிக்கும் இந்திய மாணவர்கள்..
அதன் ஒரு பகுதியாக உக்ரைனில் இருந்து ருமேனியா வழியாக மாணவர்களை அழைத்து வந்து இந்தியாவுக்கு விமானங்கள் மூலம் அழைத்து வருவதற்கான திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் உக்ரைனில் சிக்கியிருக்கும் கோவை மாணவி அழகுலெட்சுமியுடன் அவரது தந்தை புதிய தலைமுறை செய்தி நேரலை வாயிலாக பேசியுள்ள விஷயம் நெகிழ வைத்துள்ளது.
பதுங்கு குழியில் 500 மாணவர்கள் தஞ்சம்
முன்னதாக குண்டு வெடிப்பு பயமும், பதற்றமும் நிலவுவதாக குறிப்பிட்ட மாணவி அழகுலட்சுமி, சுமார் 500 மாணவர்கள் பாதாள பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மிசைல் போடப்படுவதாக தகவல் வந்ததால் யாருக்கும் தூக்கம் வரவில்லை என்று கவலைப்பட்ட அழகுலட்சுமி, ஊரடங்கு முடிவதற்காக காத்திருந்து வெடிகுண்டுகள் வீசப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மகளுடன் கண்ணீர் மல்க பேசிய தந்தை
இந்த நிலையில் தான், உக்ரைனின் தலைநகர் கீவ்-வில் சிக்கியிருக்கும் கோவையைச் சேர்ந்த மாணவியும் தன் மகளுமான அழகுலெட்சுமியுடன் கண்ணீர் மல்க பேசும் அந்த தவிப்பு மிகுந்த தந்தை சிவகுமார் “உக்ரைனில் இருந்து இந்த ஊருக்கு வந்து இங்கிருக்கும் அரசு கோவை மெடிக்கல் கல்லூரியில் சேர்ந்து என் மகள் படித்தால் நல்லாருக்கும், அனைத்து குழந்தைகளையும் மீட்டுக்கொண்டு வர முதல்வர் ஐயா உதவி செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
அழகு.. சாப்டியாமா? சீக்கிரம் வந்துருடா..
மேலும், அழகுலட்சுமியிடம் பேசிய அவரது தந்தை சிவகுமார், “அழகு.. சாப்டியாமா? சீக்கிரம் வந்துருடா..” என அழத் தொடங்கிவிட்டார். மேலும், “உன் அம்மா அழுதுகிட்டே இருக்காடா.. நீ இங்க வந்து முதல்வர் ஐயா கிட்ட கேட்டு கோவை மெடிக்கல் கல்லூரியில் படிம்மா” என கூறியவரிடம், “பயப்படாதீங்க, நான் பத்திரமா ஊர் வந்து சேந்திடுவோம்!” என அவரது மகள் குறிப்பிட்டுள்ளார்.