இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தின் மூலம் முந்தைய வருடம் தேசிய விருது பெற்றவர்.
இவர் தமது அடுத்த பரிசோதனை முயற்சியாக, இரவின் நிழல் எனும் சிங்கிள் ஷாட் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். சுமார் 2 மணி நேரத்துக்கு ஒளிபரப்பாகும் நான் லீனியர் படமாக இந்த திரைப் படத்தை பார்த்திபன் உருவாக்கியிருக்கிறார். ஒரே ஒரு கிம்பிள் கேமரா கொண்டு படம் முழுவதும் ஒரே முழு நீள ஷாட்டாக பல்வேறு டேக்குகளுக்கு பின்னர், சிங்கிள் ஷாட்டில் படம்பிடித்தனர்.
இந்த சிங்கிள் ஷாட் திரைப்பட உருவாக்கத்துக்கு தகுந்த 59 அரங்கங்கள் கொண்ட பிரமாண்டமான செட்டை உருவாக்கியுள்ளார்கள். இந்த திரைப்படத்தில் ஏறத்தாழ நூற்றுக்கணகான நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றியுள்ளனர்.
இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை மற்றும் பின்னணி இசை அமைக்க, ஆர்துர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலைப்பணியை விஜய் முருகன் கவனித்துக்கொண்டுள்ளார். மேலும் பல ஆடை, பருவநிலை மற்றும் ஒப்பனை மாற்றங்களுடன் 50 வருடம் பயணிக்கும் ஒரு மனிதனின் கதையாகவும், அவனை சுற்றியுள்ள கதாபாத்திரங்களின் வருகையாகவும் இந்த படம் உருவாகி வந்துள்ளது.
இப்படத்தினை முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டிய நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை பாராட்டியுள்ளார். இது தொடர்பான தமது ட்வீட்டில், “எதிலும் தனிப்பாணி - அதுதான் இரா. பார்த்திபன்.. ஒத்த செருப்புக்குப் பிறகு ஒத்த ஷாட் படம்!
இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்! Nonlinear single shot படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்!” என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.