நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வென்றதை அடுத்து மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ளார். தந்தையும் முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான மு.கருணாநிதிக்கு இருந்த கதை, கவிதை, எழுத்து, இலக்கியம் மற்றும் கலையார்வம் அனைவரும் அறிந்ததே.
கலைஞர் எழுத்தில் உருவான பல திரைப்படங்கள் ஹிட் படங்கள் ஒரு சகாப்தம் என சொல்லலாம். தந்தையை போலவே தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலையார்வம் உடையவர் தான். திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய “முரசே முழங்கு” ஸ்டாலின் நடித்த முதல் நாடகம். இதேபோல, திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே என திராவிட கொள்கை பரப்பு நாடகங்களில் நடித்த மு.க.ஸ்டாலின் குறிஞ்சி மலர், சூர்யா என டிவி சீரியலிலும், ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் என 2 திரைப்படங்களிலும் நடித்தார்.
1998ல் மு.கருணாநிதி வசனத்தில் உருவான ‘ஒரே ரத்தம்’ படத்தில் மத பாகுபாடுகளுக்கு எதிரான சமுதாய புரட்சி பேசுகிற கதாபாத்திரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடும் புரட்சி கதாபாத்திரமான நந்தகுமார் எனும் பாத்திரத்தில் ஸ்டாலின் நடித்திருந்தார். இதேபோல், இதே ஆண்டு விஜயகாந்த், ரேகா நடிப்பில் உருவான ‘மக்கள் ஆணையிட்டால்’ படத்தில் நடித்த ஸ்டாலின், இப்படத்தில் பாடுவது போல் நடித்திருக்கும், ‘ஆற அமர கொஞ்சம் யோசித்து பாருங்கள்’ பாடல் இன்றும் திமுக பிரச்சார பாடல்கள் டாப் ட்ரெண்டிங்.
இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் நா.பார்த்தசாரதி எழுத்தில் உருவான குறிஞ்சி மலர் கதையை தூர் தர்ஷனில் சீரியலாக இயக்கியபோது அதில் வரும் அரவிந்தன், பூரணி கதாபாத்திரங்களில் அரவிந்தன் கேரக்டரில் ஸ்டாலின் நடித்தார். தொடர்ந்து 13 பாகங்களாக வெளிவந்த இந்த தொடரில் பூரணியின் அரசியல் வாழ்வுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்வார் அரவிந்தன். அதுதான் ஸ்டாலின் நடித்த கேரக்டர்.
1998க்கு பிறகு ஸ்டாலின் திரைத்துறையில் நடிக்கவில்லை என்றாலும் தேர்தல் பிரச்சாரங்களின் விடியட்டும் முடியட்டும் குறும்படங்களில் ஹீரோவாக தோன்றினார். இப்போது நடந்த தேர்தலில் ‘ஸ்டாலின் தான் வராரு’ பாடலில் நடிப்பாக அல்லாமல், இயல்பான சூழல்களில் நடைபோட்டு பட்டையை கிளப்பியிருப்பார்.
ALSO READ: "முதல்வர் ஸ்டாலினின் முதல் நாள் ஆணை!".. பாராட்டி இயக்குநர் ஷங்கர் சொன்னது என்ன தெரியுமா?