நடிகர் அஜித்குமார் நடிக்கும் 'துணிவு' படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம் குறித்து படப்பிடிப்பில் பணியாற்றிய நபர் ஒரு பதிவிட்டுள்ளார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.
இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.
இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'துணிவு' படத்தின் டப்பிங் பணிகள் கடந்த வாரம் முதல் துவங்கியது. நடிகர்கள் அஜித் குமார், மஞ்சு வாரியர், பிரேம் குமார், வல்லவன், பிக்பாஸ் அமீர் ஆகியோர் டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
'துணிவு' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள பிரபல EVP Film City-யில் முழுவீச்சில் நடைபெற்றது. இந்த பாடலுக்கு நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்தார்.
இந்நிலையில் இந்த பாடல் படப்பிடிப்பில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "துணிவு படப்பிடிப்பு.. ராப் பாடல் படப்பிடிப்பின் போது தல செட் உள்ள வந்து வந்து போயிட்டு இருந்தாரு. நானும் ஒரு நாலு பேர் பசங்க ஓரமா நின்னு பேசிட்டு இருந்தோம். அப்போ தல வந்தாரு அந்த பக்கம். எங்கள பாத்து, "ஏன் நின்னுட்டு இருக்கீங்க? ஒர்க் பண்ணி டயர்ட் ஆகி இருப்பீங்க உட்காருங்க" என சொல்லி தோள்ப்பட்டை மேல் கை வைத்து சொல்லிட்டு போனார். கடைசியாக என் பக்கத்தில் நின்ற ஒரு பையன், சார் பரவாயில்லை என்று சொன்னதற்கு.. தல என்ன தெரியுமா சொன்னாரு?.. "சார்னு சொல்லாதடா அண்ணானு சொல்லுடா" என சொல்லிட்டு ஸ்மைல் பண்ணிட்டு போனாரு! அம்மோவ்!" என அந்த பணியாளர் பதிவிட்டுள்ளார்.