சினிமாவில் கேமராவுக்கு முன்பு இருப்பவர்கள் தான் மக்களிடம் பிரபலமாவதோடு, ஊடகங்களின் அங்கீகாரத்தையும் பெறுவார்கள், என்ற விதியை ஒரு சிலர் தங்களது பணியின் மூலம் உடைத்து, கேமராவுக்கு பின்னால்பணியாற்றும் தொழில்நுட்ப
கலைஞர்களாலும் கவனம் ஈர்க்க முடியும், என்பதை நிரூபித்து காட்டுவார்கள்.
அப்படிப்பட்ட தொழில்நுட்ப கலைஞர்களில் ஒருவராக தனது படத்தொகுப்பு மூலம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் பிரபல படத்தொகுப்பாளர் C.S.பிரேம் குமார்.
பிரபல படத்தொகுப்பாளர் பி.லெனின் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றிய C.S.பிரேம் குமார், ‘களவாடிய பொழுதுகள்’ படத்துக்கு லெனினுடன் இணைந்து படத்தொகுப்பு செய்தவர். பின்னர் ‘நேற்று இன்று நாளை’ திரைப்படம் மூலம் படத்தொகுப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து , ‘குற்றம் கடிதல்’, ‘மகளிர் மட்டும்’, V1 , ‘ஹவுஸ் ஓனர்’ உள்ளிட்ட பல படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
C.S.பிரேம் குமார் படத்தொகுப்பாளராக பணியாற்றிய திரைப்படங்கள் அனைத்தும் வியாபார ரீதியாக வெற்றிப் பெறுவதோடு, சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளையும் வென்று குவிக்கிறது. இதனால், வித்தியாசமான திரைப்படங்கள் என்றாலே, இயக்குநர்கள் C.S.பிரேமை தான் பலரும் அணுகுகிறார்கள்.
இதனால் தமிழ் சினிமாவின் பிஸியான படத்தொகுப்பாளராக வலம் வரும் C.S.பிரேம் குமார், ‘ராஜாமகள்’, ‘ரூம்’, ‘ராஜாவுக்கு ராஜாடா’ உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி வருகிறார். இதனிடையே C.S.பிரேம் குமார் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘திட்டம் இரண்டு’ திரைப்படம் ஜூலை 30 ஆம் தேதி நேரடியாக Sony Liv ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த பத்திரிகையாளர்கள், இந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் மற்றும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷை பாராட்டினர். முக்கியமாக படத்தொகுப்பாளர் C.S.பிரேமை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருக்கும் C.S.பிரேம் குமார், தனது படத்தொகுப்பு மூலம், திரைக்கதையின் போக்கை யூகிக்க முடியாத வகையில் காட்சிகளை கச்சிதமாக தொகுத்திருக்கிறார்.
ஏற்கனவே பல படங்களில் தனது திறமையை C.S.பிரேம் குமார் நிரூபித்திருந்தாலும், ‘திட்டம் இரண்டு’ படத்தின் மூலம் கூடுதல் கவனம் பெற்றிருப்பவரை பாராட்டி வரும் பத்திரிகையாளர்கள் படத்தொகுப்பாளர் C.S.பிரேம் குமார், தம் பணிகளுக்கு நிச்சயம் தேசிய விருது பெறுவார், என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுவரை எதார்த்த படங்களில் பணியாற்றிய C.S.பிரேம் குமார் இப்பொழுது பொழுது போக்கு (Commercial) அம்சமான படங்களிலும் கவனம் செலுத்திவருகிறார்.