கடந்த ஏப்ரலில் அறிமுக இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார் நடிப்பில் மண்டேலா படம் வெளியானது.
விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் இந்த படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் விஷ்பெர்ரி நிறுவனங்களுடன் இணைந்து Y Not ஸ்டுடியோஸ் சசி காந்த், இயக்குனர் பாலாஜி மோகன் விண்டோ நிறுவனம் இணைந்து தயாரித்து இருந்தன.
இதில் யோகிபாபு, ஷீலா உடன் சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு விது ஐயண்ணா ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங்கை பிலோமின் ராஜ் கையாண்டார். இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்தார்.
இந்நிலையில், இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப இந்த ஆண்டு மொத்தம் 14 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் இந்த மண்டேலா திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கான இந்திய பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மேலும் தமிழில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே படம் மண்டேலா மட்டுமே ஆகும். இந்தப் பட்டியலில் மலையாளப் படமான ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான நயாட்டு திரைப்படமும் , வித்யா பாலனின் நடிப்பில் உருவான பாலிவுட் ஷெர்னி திரைப்படமும், விக்கி கவுசால் நடித்த சர்தார் உத்தம் பாலிவுட் படமும் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த 14 படங்களில் இருந்து ஒரே ஒரு திரைப்படம் திரு. ஷாஜி N கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்படும். இதற்கான திரையிடல் வேலைகள் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.